எளிதில் கிடைக்கும் மூலிகைகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | 12:02 PM | Best Blogger Tips
மூலிகை மருத்துவமா? அதெல்லாம் வேண்டாம். இந்தக் காலத்தில் யார் மூலிகைகளைத் தேடியலைந்து, கண்டுபிடித்துக் கொண்டு வந்து மருந்தாகப் பயன்படுத்துவது? அதற்கெல்லாம் நேரம் ஏது? உடம்பு சரியில்லையா? டாக்டரிடம் போனோமா? ஓர் ஊசியைப் போட்டுக் கொண்ட வந்து அன்றாட வேலைகளைக் கவனித்தோமா என்று இருக்க வேண்டும். இதெல்லாம் இந்த அவசர யுகத்துக்குப் பொருந்தவே பொருந்தாது என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். "மூலிகைகளை நீங்கள் வேறு எங்கும் தேடி அலைய வேண்டாம். அது உங்கள் வீட்டுச் சமையலறையிலேயே இருக்கிறது" என்கிறார் சித்த மருத்துவர் அபிராமி.

மூலிகை என்றால் ஏதோ காடு, மலை எல்லாம் சுற்றித்திரிந்து கண்டுபிடிக்க வேண்டிய ஒன்று என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மூலிகைகளைப் பற்றித் தெரிந்திருந்தால் மிகவும் நல்லது. உதாரணமாக, குழந்தைகளுக்குச் சளிபிடித்து விடும். லேசான காய்ச்சல் இருக்கும். உடனே டாக்டரிடம் தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். டாக்டர் ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகளைக் கொடுப்பார். ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகள் குடலில் புண்ணை ஏற்படுத்தும். மேலும் ஒவ்வொரு முறையும் மருந்தின் அளவை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் அது வேலை செய்யும். அதனால் உடலுக்குப் பல்வேறு கேடுகள் உண்டாகும்.

இதற்கு ஓர் எளிய மருத்துவம் உள்ளது. கற்பூரவல்லியின் இலையை நசுக்கி 1 டம்ளர் தண்ணீரில் 10 சொட்டு விட்டு அதனுடன் சிறிது தேன் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால் சளி நீங்கிவிடும். நுரையீரல் சுத்தமாகிவிடும். குழந்தைக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். இது எவ்வளவு எளிய - ஆனால் தீங்கில்லாத மருத்துவம்?

12 - 13 வயது வரை குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லை இருக்கும். பூச்சி அதிகமானால் ரத்த சோகை ஏற்படும். பசி எடுக்காது. முகத்தில் வெண்திட்டுகள் அங்கங்கே இருக்கும்.

இதற்கு மூலிகை வைத்தியத்தின் மூலம் எளியமுறையில் தீர்வு காணலாம். வேப்பங்கொழுந்தை நசுக்கி, மிளகு, சீரகத்தை நுணுக்கி மூன்றையும் பாலில் போட்டு ஊற வைக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து வடிகட்டிக் குழந்தைகளுக்கு அதைக் குடிக்க கொடுக்க வேண்டும். இந்த மருந்துக்குப் பெயர் வேப்பங்காரம். பூச்சித் தொல்லை அடியோடு ஒழிவதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரித்துவிடும்.

குழந்தைகளுக்கான இன்னொரு அருமையான மருந்து வசம்பு. இதைப் பிள்ளை வளர்த்தி என்பார்கள். வசம்பை விளக்கெண்ணையில் நனைத்து, விளக்கெண்ணை ஊற்றி எரியும் அகல் விளக்கில் காட்டிச் சுட்டு, அதன் கரியைப் பாலில் கலந்து கொடுக்க வேண்டும். இது குழந்தைகளின் ஞாபகச் சக்தியை அதிகரிக்கும். வயிற்றில் எந்தவிதக் கிருமியிருந்தாலும் அவற்றை நீக்கிவிடும். நுரையீரலில் கிருமி சேராதவாறு தடுக்கும்.

இப்போது பெண்களுக்கு அதிகம் பாதிக்கும் பிரச்சினைகளில் தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பதும், அதிக உடல் எடையும் முக்கியமானவை. இந்தப் பிரச்சினைகள் வரக் காரணம் பலமுறை பாலீஷ் செய்யப்பட்ட அரிசியைப் பயன்படுத்துவது, சுவையாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக அளவில் எண்ணெய் சேர்ப்பது போன்றவையே.

நமது நாட்டில் பெண்களுக்கு சரியான உணவுப் பழக்கங்கள் இல்லை. நேரத்திற்குச் சாப்பிடமாட்டார்கள். குடும்பத்தில் எல்லாரும் சாப்பிட்ட மிஞ்சியதை அது வீணாகிவிடக் கூடாது என்பதற்காக நிறைய சாப்பிட்டு வைப்பார்கள். வேலைக்குப் போகும் பெண்கள் மெதுவாக சென்று சாப்பிடாமல் அவசர அவசரமாகச் சாப்பிடுவார்கள். இதனால் உடல் எடை அதிகரித்து விடும். தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரக்கும்.

தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரப்பவர்கள் முள்ளங்கி, முட்டைகோஸ், சோயாபீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடக்கூடாது. மீன்வகைகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அயோடின் உப்பைப் பயன்படுத்த வேண்டும். அயோடின் உப்பை பீங்கான் பாத்திரத்தில் போட்டு நன்றாக மூடி வைக்க வேண்டும். திறந்து வைக்கக் கூடாது. அப்படி திறந்து வைத்தால், உப்பிலுள்ள அயோடின் காற்றில் கரைந்து விடும்.

அந்தந்த சீசனுக்கு ஏற்ற உணவு வகைகளைப் பற்றிப் பெண்கள் தெரிந்து வைத்திருந்தால் குடும்பத்தில் ஒவ்வொருவரின் உடல்நிலைக்கேற்ற உணவு வகைகளைக் கொடுக்க முடியும். குளிர்ச்சியான நேரத்தில் பூசணி, பீர்க்கங்காய் போன்றவற்றை குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்களுக்குக் கொடுக்காமல் தவிர்க்கலாம்.

பெண்களுக்கு உள்ள இன்னொரு பிரச்சினை, மாதவிலக்கு சரியான கால அளவில் வராதது, அதிக ரத்தப்போக்கு, அல்லது குறைந்த ரத்தப்போக்கு போன்றவை. இதற்குச் சிறந்த மருந்து சோற்றுக் கற்றாழை. அதை வீட்டில் தொட்டியிலேயே வளர்க்கலாம். சோற்றுக் கற்றாழையை வெட்டி அதிலுள்ள சோறை எடுத்து வேகமாக விழும் குழாய்த் தண்ணீரில் காட்டி, நன்றாக அதன் கசப்பு போகும்வரை அலசி 1 டீஸ்பூன் 1 வேளை சாப்பிட்டு வந்தால் இந்த மாதவிலக்குப் பிரச்சினைகள் எல்லாம் நீங்கிவிடும்.

அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் ஒற்றையடுக்கில் உள்ள செம்பருத்திப் பூவின் இதழ்களை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து அதன் கஷாயத்தை தொடர்ந்து 3 மாதங்கள் குடித்து வந்தால் குணமாகும்.

முதியவர்கள் எல்லாருக்கும் வருவது மூட்டுவலி. இதற்கு முடக்கத்தான் கீரை நல்ல மருந்து. மிளகு, சீரகம், இஞ்சி, வெங்காயம், பூண்டு எல்லாவற்றையும் அரைத்து அந்த விழுதை முடக்கத்தான் கீரையுடன் கலந்து தண்ணீரில் வேக வைத்துச் சூப் போல செய்து குடிக்க வேண்டும்.

இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 1 வேளை கோதுமை உணவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கீரை, காய்கறி போன்றவற்றைச் சாதத்தின் அளவிற்குச் சமமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். நமக்குச் சாதத்தின் அளவு அதிகமாகவும் காய்கறி, கீரை மிகவும் குறைவாகவும் "தொட்டுக்" கொண்டு சாப்பிட்டுத்தான் பழக்கம். இந்தப் பழக்கத்தை மாற்ற வேண்டும்.

40 வயதுள்ள எல்லாரும் மிளகு, வெந்தயம் சம அளவு கலந்து பொடி செய்து 1\4 டீஸ்பூன் ஒவ்வொரு நாளும் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த நோயிலிருந்து தப்பிக்கலாம்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை அதிக அளவு உணவில் பயன்படுத்தினால் உடலில் நஞ்சு படியாது. கொழுப்பும் சேராது.

பொதுவாகச் சித்த மருத்துவம் என்றால் பத்தியம் இருக்க வேண்டுமே என்று பயப்படுவார்கள். சித்த மருத்துவம் என்றில்லை, எல்லா மருத்துவத்திலும் உணவுக் கட்டுப்பாடுகள் உள்ளன.

மீன், பால் போன்றவற்றைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படுபவர்கள் அதைச் சாப்பிடக் கூடாது. தோல் வியாதி உள்ளவர்கள் கத்திரிக்காய் அதிகமாகச் சேர்க்கக் கூடாது. புளிப்பு அதிகமாகச் சேர்க்கக் கூடாது.

சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரை நோய்க்குப் பத்தியம், மருந்துக்குப் பத்தியம் என்று இரண்டு விதமான பத்தியங்கள் உள்ளன. சில நோய்களுக்கு சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. சித்த மருந்து சாப்பிடும் போது பாகற்காய், அகத்திக்கீரை, அருகம்புல் சாறு சாப்பிடக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தைக் குறைக்கும் தன்மை படைத்தவை. மருந்து சாப்பிட்டு விட்டு பாகற்காய், அகத்திக் கீரை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால் மருந்தின் பலன் கிடைக்காது.



Source from : FB -தமிழ்ச் சமுதாயம் - தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி