அந்த மூன்று நாட்களின் அவஸ்தையை தவிர்க்கணுமா? காபி டீ குடிக்காதீங்க!
பெண்களுக்கு மாதந்தோறும் பீரியட்ஸ் பிரச்சினை என்பது பெரும் சிக்கலை
ஏற்படுத்திவிடும். தலைவலி, மனஅழுத்தம், கை கால்
வலி என அந்த மூன்று நாட்களும் துவண்டு போய்விடுவார்கள். இல்லத்தரசிகளுக்கு பிரச்சினையில்லை
வீட்டில் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். ஆனால் அலுவலகம் செல்லும் பெண்களுக்குத்தான்
டென்சன் அதிகம்.
ஆரோக்கியமாக உள்ள பெண்களுக்கு சராசரியாக 28 நாட்களில் மாதவிலக்கு சுழற்சி
ஏற்படும். இதன்படி வருடத்திற்கு 13 முறை பீரியட்ஸ் டைம் ஏற்படவேண்டும் என்கின்றனர்
மகப்பேறு மருத்துவர்கள். மாதசுழற்சி வருவதற்கு முன்பாகவே சிலருக்கு உடல்வலி, மார்பகவலி, எரிச்சல் ஆரம்பித்துவிடும்.
சிலருக்கு தலைவலியும் அதிகரித்துவிடும். இதுபோன்ற நாட்களில் ஏற்படும் வலிகளை
சரியான சத்துணவுகளை உண்பதன் மூலம் சமாளிக்க முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
மாதவிலக்கு நாட்களில் காபி, டீ போன்ற பானங்களை
குடிப்பதை தவிர்க்க வேண்டுமாம். ஏனெனில் காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும்,
மனஅழுத்தத்தையும் அந்த நாட்களில் அதிகரிக்கும் என்கின்றனர்
ஆய்வாளர்கள்
மனஅழுத்தம் குறைக்கும் வாக்கிங்
மாதவிலக்கு நாட்களில் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது
உடலையும், மனதையும் ரிலாக்ஸ் செய்யும். வலிகளை குறைக்கும். அதேபோல் அடி வயிற்றில்
சுடுதண்ணீர் ஒத்தடம் கொடுக்கலாம்.
மாதவிடாய் நாட்களுக்கு ஒரு வாரம் முன்பு, இருபது நிமிட வாக்கிங்
போவது மனரீதியான பாதிப்புகளைக் குறைக்க உதவும். இதேபோல் அந்த மூன்று நாட்களில்
குறைந்த பட்சம் 7முதல் 8 மணி நேரம் கண்டிப்பாக உறங்கி ஓய்வெடுக்கவேண்டும்.
காபி டீ குடிக்காதீங்க
மாதவிலக்கு நாட்களில் காபி, டீ போன்ற பானங்களைத்
தவிர்க்கலாம். தினமும் இரண்டு கப்பிற்கு மேல் காபி, டீ,
குடிக்கும் பெண்கள் சாதாரணப் பெண்களைவிட ஏழு மடங்கு மாத விலக்கு
நாட்களில் அவதிப்படுவார்கள் என்கிறார்கள், ஆராச்சியாளர்கள்.
காபியில் உள்ள காஃபின் பதற்றத்தையும் எரிச்சலையும் அதிகப்படுத்துமாம்.
ரிலாக்ஸ்க்கு அன்னாசி பழம்
அன்னாசிபழம் ஜூஸ் சாப்பிடலாம். அதில் உள்ள என்சைம்கள் தசைகளை ரிலாக்ஸ்
செய்யும். அதேபோல் இஞ்சி டீ சாப்பிடுவதும் களைப்பை போக்கும். மனஅழுத்தம் ஏற்படுவதை
தவிர்க்க வைட்டமின் ‘சி' உள்ள ஆரஞ்சு,
திராட்சை, எலுமிச்சை ஜூஸ்களை குடிக்கலாம்.
வைட்டமின் சத்துணவுகள்
இந்தச் சமயத்தில் பெண்களுக்கு களைப்பும், அயர்ச்சியும்
ஏற்படும் எனவே துத்தநாகம், கால்சியம், வைட்டமின்
பி சத்து நிறைந்த உணவுகள் மாதவிலக்கு சமயங்களில் வலிகளை நீக்கும். மேலும்
வைட்டமின் ஏ,டி சத்து அதிகம் உள்ள கேரட், பசலைக்கீரை, பால் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள
வேண்டும்.
களைப்பு நீக்கும் வைட்டமின் பி6
மார்பக வலி, களைப்பு போன்றவற்றிலிருந்து நிவாரணம் பெற,
வைட்டமின் பி6 அதிகம் உள்ள மீன், கோழி,
வாழை, உருளை போன்ற உணவுகளை சாப்பிடலாம். இந்த
ஊட்டச்சத்துணவுகளை மாதவிடாயின் ஒரு வாரத்துக்கு முன்பும், மாதவிடாயின்
போதும் கடைப்பிடித்தல் நல்லது!
கொழுப்பு சத்து உணவுகள்
பீரியட்ஸ் வரும் நாட்களுக்கு முன்பாக அதிக கொழுப்புச் சத்துள்ள உணவுகள் உண்பதை
தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது PMS எனப்படும் (Pre
menstrual syndome) அறிகுறிகளை அதிகப்படுத்தும். அந்த நாட்களில்
குறைவான கொழுப்புள்ள உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும்
காரம் உப்பு வேண்டாம்
மாதவிலக்கு நாட்களில் அதிகம் உப்பு, காரம்
சேர்ந்த ஊறுகாய், நொறுக்குத்தீனி போன்றவைகளை சாப்பிட
வேண்டும் என்று தோன்றும் ஆனால் அவற்றை கண்டிப்பாக ஒதுக்கிவிட வேண்டும். அதேபோல்
ஸ்வீட், ஐஸ்க்ரீம், சாக்லெட், சிப்ஸ் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அந்த மூன்று
நாட்களில் இனிப்புக் குறைவாக உள்ள உணவுகளைச் சாப்பிடுவதே நல்லது.
ஆதரவாக இருங்களேன்
குடும்பத்திற்காக உழைத்து களைக்கும் இல்லத்தரசிகளுக்கு மாதம் மூன்று நாட்கள்
அவஸ்தைதான். இந்த நாட்களில் அவர்களுக்கு டென்சன் ஏற்படாமல் தடுப்பது
குடும்பத்தினரின் கைகளில் உள்ளது. இதேபோல் மனஅழுத்தத்தினால்
பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டுவருவது குடும்பத்தினரின்
கைகளில் உள்ளது. இதன்மூலம் மாதவிலக்கு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும்.