“என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா

மணக்கால் அய்யம்பேட்டை | PM 12:03 | Best Blogger Tips
“என் பொண்ணு முன்னாடியெல்லாம் ரொம்ப நல்லா இருந்தா. சொன்ன பேச்சைக் கேப்பா, ஒழுங்கா படிப்பா… யார் கண்ணு பட்டுச்சுன்னே தெரியல. இப்பல்லாம் யார் பேச்சையும் கேட்கறதே இ
ல்லை. எதுக்கெடுத்தாலும் எதுத்துப் பேசறா. அப்பா, அம்மாங்கற மரியாதையே சுத்தமா இல்லாம போச்சு ! என்ன பண்றதுன்னே தெரியலை” இப்படி யாராச்சும் பேசினா, உங்க பொண்ணுக்கு பதின் வயதான்னு கேளுங்க.

பெரும்பாலும் “ஆமாம்” என்பது தான் பதிலா இருக்கும். அப்படியானால், இது ஒரு வீட்டுப் பிரச்சினையில்லை. இந்தியாவில் சுமார் 25 கோடி பதின் வயதுப் பெண்கள் இருக்கிறார்கள். அத்தனை வீடுகளிலும் இப்படி ஏதோ ஒரு டீன் ஏஜ் ஜல்லிக்கட்டு நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தப் பதின் வயதுப் பிரச்சினையைக் கையாளணும்ன்னா முதல்ல பெற்றோர் கொஞ்சம் பதின் வயதுப் பிராயத்துக்கு இறங்கி வரணும்.

அதாவது, உங்க மகளோட செயல்களைப் பார்த்து டென்ஷன் ஆகாம, அந்த செயல்களுக்கான காரணம் என்ன என்று பார்க்க வேண்டும். அந்தக் காரணம் புரிந்து விட்டால் நீங்கள் உங்கள் மகளுடைய செயல்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். அவளுக்குத் தேவையான அரவணைப்பையும், சுதந்திரத்தையும் கொடுப்பீர்கள் என்பது தான் உண்மை!

பதின் வயதுப் பிராயமும் குழந்தைப் பருவத்தின் கூட்டை உடைத்து பெரிய மனுஷத்தோரணைக்குள் நுழைகின்ற தருணம். பெற்றோர் என்ன செய்தாலும் அது தப்பாவே தோன்றுகிற பருவம். அதற்குக் காரணம் அவர்கள் அவர்களுடைய வாழ்க்கையை அல்லது வாழ்க்கையின் சில பகுதிகளை தாங்களாகவே உருவாக்கிக் கொள்ள முயல்வது தான்!

இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டியது ரொம்ப அவசியம். இனிமேல் பெற்றோரின் உதவி இல்லாமலேயே என்னால் தனியாக இயங்க முடியும் என பெரும்பாலான டீன் ஏஜ் பருவத்தினர் முடிவு கட்டி விடுகிறார்கள். அதற்கு வலுசேர்க்கும் விதமாக அவர்களுக்கு ஏகப்பட்ட எனர்ஜி கதைகள் நண்பர்களிடமிருந்து கிடைத்து விடுகிறது.

பெற்றோரைக் கிண்டலடிப்பது, அவர்களை ஒன்றும் தெரியாதவர்களாய்ச் சித்தரிப்பதெல்லாம் இந்த காலகட்டத்தில் வெகு சகஜம். அதை ரொம்ப சீரியஸாய் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது மட்டுமே பெற்றோர் செய்ய வேண்டிய ஒரே விஷயம். குறிப்பாக பன்னிரண்டு வயதைத் தாண்டும் பருவம் தான் பெண்களுக்கு தங்களைக் குறித்த கவலைகளும், விழிப்பும் ஒருசேர எழும் காலம்.

அதுவரை அம்மா சொல்லும் ஆடையுடன் பள்ளிக்குப் போவாள். அதன்பின் நண்பர்கள் சொல்லும் பேஷன் டிரஸ் தேவைப்படும். பன்னிரண்டு வயது வரை பவுடர் கூட தேவைப்படாத பெண்ணுக்கு அதன் பிறகு புருவத்துக்கு ஒன்று, கன்னத்துக்கு ஒன்று, உதட்டுக்கு ஒன்று என ஏகப்பட்ட மேக்கப் பொருட்கள் தேவைப்படும் !

அதற்குக் காரணம், அடுத்தவர்களின் விமர்சனங்கள் குறித்தான எதிர்பார்ப்பும், கவலையும் தான். தப்பித் தவறி கூட அவளுடைய அழகு குறித்தோ, உடல் எடை குறித்தோ, அறிவு குறித்தோ எதையேனும் தரக் குறைவாய் பேசவே பேசாதீர்கள். இன்னும் குறிப்பாக பிறர் முன்னிலையில் அதைப் பற்றி சிந்திக்கவே செய்யாதீர்கள் என்கின்றனர் உளவியலார்கள்.

எதிர்பாலினரோடான ஈர்ப்பும், எதையேனும் புதிதாய்ச் செய்து பார்க்கும் ஆர்வமும் அவர்களிடம் மேலோங்கியிருக்கும். உடல் தரும் வளர்ச்சியும், அது தரும் கிளர்ச்சியும் அவர்களுக்கு பாலியல் பாதையில் புது அனுபவங்களாய் விரிகின்றன. அதற்கான சுதந்திரங்கள் வீடுகளிலிருந்து மறுக்கப்படும் போது எதிர்ப்பு காட்டுகிறார்கள்.

பதின் வயது நிறைய சுதந்திரங்களைத் தேடும். தன்னுடைய எல்லைக்குள் பெற்றோர் வரக்கூடாது என விருப்பப்படும். பதின் வயதுப் பிள்ளைகளிடம் கவனமாய் நடந்து கொள்வதற்கு இன்னொரு காரணத்தையும் இருக்கிறது. பதின் வயது “மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள்” போன்றவை அலைக்கழிக்கும் காலம் என்கிறார்.

அவர்களுடைய உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் வேலைகளைக் கொஞ்சம் ஒத்தியே வையுங்கள் என்பது தான் அவர் தரும் அறிவுரை. பதின் வயதினரை அடிக்கடி பாராட்டுங்கள். ஆடை நன்றாக இருந்தால் பாராட்டுங்கள். எதையேனும் சாதித்தால் பாராட்டுங்கள். இப்படிப்பட்ட சின்னச் சின்ன விஷயங்கள் பெற்றோருக்கும் மகளுக்கும் இடையேயான இடைவெளியை இறுக்குவதுடன், பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையையும் ஊட்டும்.

இந்த வயதில் பெற்றோர் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம், நல்ல விஷயங்கள் என்ன என்பதையும் கெட்ட விஷயங்கள் என்ன என்பதையும் அவளுக்குச் சொல்லிவிடுவது மட்டுமே. இந்த புரிதலை குழந்தையாய் இருக்கும்போதே ஊட்டியிருந்தால் ரொம்ப நல்லது. குறிப்பாக புகைத்தல் நல்லதல்ல, மது உடல் நிலையைப் பாதிக்கும் போன்ற விஷயங்கள் அவளுக்குச் சொல்லவேண்டும்.

தவறான பாலியல் உறவுகள் என்னென்ன சிக்கல்களைக் கொண்டு வரும் போன்ற விஷயங்களையும் அவர்களிடம் சொல்வதே நல்லது. எந்த நட்பு நல்ல நட்பு என்பதைச் செயல்பாடுகளின் மூலமாகச் சொல்லிக் கொடுங்கள். “கல்யாணி கூட சேராதே’ என்று சொல்வது உங்கள் மகளை வெறுப்பேற்றும். அதை விடுத்து நல்ல தோழி என்பவள் உனக்குப் பிடிக்காத எதையும் செய்யக் கட்டாயப்படுத்த மாட்டாள்.

தப்பான செயல்களில் ஈடுபடுத்தமாட்டாள் போன்ற செயல்பாட்டு விஷயங்களைச் சொல்லவேண்டும். அதிலிருந்து நல்ல நட்பு எது, தவிர்க்கப்பட வேண்டிய நட்பு எது என்பதை உங்கள் பதின் வயது மகள் புரிந்து கொள்வாள் ! இந்த பதின்வயதிலும் மூன்று வகையான எதிர்ப்பு நிலைகள் உண்டு.

9 முதல் 13 வயது வரை, 13 முதல் 15 வயது வரை, 15 முதல் 19 வயது வரை என மூன்று படிகளாக உள்ளது. முதல் நிலையில் “நாங்கள் குழந்தைகள் அல்ல” என்பதை நிறுவுவதும், இரண்டாம் நிலையில் “தங்களை வலிமை வாய்ந்தவர்களாய் காட்டிக் கொள்வதுமே” பிரதானமான செயல்கள். மூன்றாம் நிலை பெரும்பாலும் முதல் இரண்டு நிலைகளிலும் அமைதியாய் இருக்கும் பதின் வயதினரின் எதிர்ப்புக் காலம் என்கிறார் இவர்.

எல்லா எதிர்ப்புகளுமே தங்களுடைய அனுமதிக்கப்பட்ட எல்லையை விரிவுபடுத்திக் கொள்ளும் பதின் வயதினரின் முனைப்பு என்று சொல்வதில் தவறில்லை. அதில் பெற்றோர் பல விஷயங்களை அனுமதிக்கலாம். வாரத்துக்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது ஒரு டீன் ஏஜ் பெண் தன் அழகைக் கூட்டும் சமாச்சாரங்கள் குறித்து நெட்டில் துழாவுகிறாள்.

இதைத் தவிர டீன் ஏஜ் பெண்கள் அதிகமாய் தேடுவது டேட்டிங், தாய்மை,
விர்ஜினிடி, குடும்பக் கட்டுப்பாடு, மன நல உதவி என பட்டியல் போடுகிறது அந்த ஆராய்ச்சி. டீன் ஏஜுக்கு அலர்ஜியான விஷயங்களில் முதலிடம் இந்த அறிவுரை. காரணம் தன்னை விட அறிவாளிகள் இருக்க முடியாது எனும் அவர்களுடைய எண்ணமாய்க் கூட இருக்கலாம்.

எனவே மகள் சொல்வதை நிறைய கேட்டாலே போதும் அவளை நீங்கள் அவள் போக்கில் சென்று வழிகாட்ட முடியும். இந்த காலகட்டத்தில் பெற்றோரின் கடமை இரண்டு தான். ஒன்று, மகளின் உடல், உளவியல் மாற்றங்களைப் புரிந்து கொண்டு நடந்து கொள்வது. இரண்டாவது அவர்களுடைய போக்கிலேயே போய் அவர்களுக்கு ஆதரவு கலந்த வழிகாட்டுதலை வழங்குவது !