ஆலு மட்டர் பரோட்டா

மணக்கால் அய்யம்பேட்டை | 2:28 PM | Best Blogger Tips
பரோட்டா என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். அத்தகைய பரோட்டாவில் ஒரு வகையான ஆலு மட்டர் பரோட்டாவை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். என்ன பெயர் வித்தியாசமாக உள்ளதென்று பார்க்கிறீர்களா? இது வேறு எதுவும் இல்லை, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பட்டாணியை வைத்து செய்யக்கூடியது தான். இப்போது அந்த ஆலு மட்டர் பரோட்டாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
aloo matar paratha
தேவையான பொருட்கள்:
கோதுமை/மைதா மாவு - 2 கப்
தயிர் - 3 டேபிள் ஸ்பூன்
வெதுவெதுப்பான நீர் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
உள்ளே வைப்பதற்கு...
உருளைக்கிழங்கு - 3 (வேக வைத்தது)
பச்சை பட்டாணி - 1 கைப்பிடி (வேக வைத்தது)
மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்
இஞ்சி - சிறு துண்டு (துருவியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டேபிள் ஸ்பூன்
ஓமம் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை அல்லது மைதா மாவு, தயிர், வெதுவெதுப்பான நீர் மற்றும உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு போல் பிசைந்து, அரை மணிநேரம் தனியாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் மற்றோரு பாத்திரத்தில் உருளைக்கிழகை மசித்துக் கொண்டு, அதோடு பச்சை பட்டாணி, மாங்காய் பொடி, இஞ்சி, மிளகாய் தூள், கரம் மசாலா தூள், ஓமம் மற்றும் உப்பு சேர்த்து, நன்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அந்த கலவையை சிறு எலுமிச்சை உருண்டைகளாக உருட்டி வைக்க வேண்டும். அடுத்து, பிசைந்து வைத்துள்ள மாவில் சிறிதை எடுத்து, அதனை சப்பாத்தி போல் தேய்த்து, அதன் நடுவில் உருட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை வைத்து, மடித்து, மறுபடியும் சப்பாத்தி போல் தேய்த்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.
பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள மாவை போட்டு, எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக வைத்து, எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான ஆலு மட்டர் பரோட்டா ரெடி!!!