பொடுகை நீக்க வீட்டிலேயே எண்ணெய் செய்யுங்களேன்...

மணக்கால் அய்யம்பேட்டை | 6:07 PM | Best Blogger Tips
குளிர் காலம் வந்தாலே கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் பொடுகு. இது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி ஏற்படும் ஒரு பொதுவான பிரச்சனை தான். இத்தகைய பொடுகை நீக்க பல வழிகள் உள்ளன. மேலும் இந்த பொடுகுத் தொல்லை நீண்ட நாட்கள் நீடித்தால், முகப்பரு, சரும வறட்சி போன்றவற்றை ஏற்படுத்தும். ஆகவே பொடுகு இருந்தால், சாதாரணமாக நினைக்காமல், அதனை உடனடியாக நீக்க முயற்சிக்க வேண்டும். அதிலும் ஒரு முறை அதனை நீக்க முயற்சித்தால், அது மறுமுறையும் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே அது சருமத்தை பாதிப்பதற்கு முன், பொடுகை நீக்கிவிட வேண்டும்.
அதற்கு சிறந்த வழி எண்ணெய் மசாஜ் தான். மேலும் அந்த பொடுகை நீக்குவதற்கு நிறைய எண்ணெய்கள் வீட்டிலேயே இருக்கின்றன. அது என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை பயன்படுத்தி பொடுகை நீக்குங்கள்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
அனைத்து வீடுகளிலுமே தேங்காய் எண்ணெய் இருக்கும். அந்த தேங்காய் எண்ணெயை வைத்து சூப்பராக பொடுகை நீக்கலாம். அதிலும் அந்த தேங்காய் எண்ணெயுடன், எலுமிச்சை சாற்றை கலந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை லேசாக சூடேற்றி, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை சேர்த்து, அந்த கலவையை தலையில் தடவி, விரல்களால் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் இரத்த ஓட்டம் சீராக இருப்பதோடு, கூந்தல் வளர்ச்சியும் அதிகரிக்கும். அதிலும் இதனை குளிப்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் செய்ய வேண்டும்.
தயிர், பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
பொடுகை நீக்கும் பொருட்களில் சிறந்தது தான் தயிர். இது பொடுகை மட்டும் நீக்குவதோடு, கூந்தலை மென்மையாகவும், பட்டுப் போன்றும் மாற்றும். பாதாம் எண்ணெய் கூந்தல் வளர்ச்சியை அதிகரித்து, வறட்சியை நீக்கும். எலுமிச்சை இறந்த செல்கள் மற்றும் பொடுகை போக்கும். ஆகவே அந்த மூன்று பொருட்களையும் கலந்து, தலைக்கு குளிப்பதற்கு முன் 1 மணிநேரம் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
செம்பருத்தி எண்ணெய்
குளிர் காலங்களில் எண்ணெய் மிகவும் அவசியமானதாக இருக்கும். ஏனெனில் அப்போது சரும வறட்சி அதிகமாக இருக்கும். இதனால் கூந்தல் உதிர்தல், பொடுகுத் தொல்லை போன்றவை அதிகம் ஏற்படும். எனவே அப்போது செம்பருத்தியை கொதிக்கும் நீரில் போட்டு, பின் அதனை அரைத்து, சிறிது தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும். பின் அதனை குளிர வைத்து, இதவில் படுக்கும் போது தலைக்கு தடவி தூங்கி, மறுநாள் காலையில் எழுந்து குளிக்க வேண்டும்.
வெந்தயம் மற்றும் தேங்காய் எண்ணெய்
வெந்தயம் பொடுகை எளிதில் நீக்கிவிடும். அதற்கு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து, பின் வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் கலந்து, தலைக்கு தடவி, 2 மணிநேரம் ஊற வைத்து, பிறகு மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் வெந்தயத்தில் உள்ள கசப்புத்தன்மையால், பொடுகு நீங்கி, கூந்தல் உதிர்தல் நின்றுவிடும். பின் கூந்தலும் வலுவடையும்.
நல்லெண்ணெய்
கூந்தல் வறட்சியை போக்கும் எண்ணெய்களில் நல்லெண்ணெயும் சிறந்த ஒன்று. இந்த எண்ணெயை அடிக்கடி தடவி வந்தால், வறட்சி நீங்கி, பொடுகு வராமல் இருக்கும். அதிலும் இதனை லேசாக சூடேற்றி, வேண்டுமென்றால் எலுமிச்சையை சேர்த்து கலந்து, தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் குளித்தால், கூந்தல் நன்கு பொலிவோடு பொடுகின்றி இருக்கும்.
மேற்கூறியவாறெல்லாம் செய்தால், பொடுகுத் தொல்லையின்றி இருக்கலாம். மேலும் உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.