சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள் (புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு - செப்டம்பர் 26, 1893)

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:19 | Best Blogger Tips

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்
(புத்த மதம் இந்து மதத்தின் நிறைவு - செப்டம்பர் 26, 1893)
================================

நான் பெளத்தன் அல்ல என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனாலும் நான் ஒரு பெளத்தன். சீனாவும் ஜப்பானும் இலங்கையும் அந்த மகானின் உபதேசங்களைப் பின்பற்றுகின்றன. இந்தியாவோ அவரைக் கடவுளின் அவதாரம் என்று போற்றி வணங்குகிறது. நான் பெளத்த மதத்தை விமர்சிக்கப் போவதாகச் சற்று
முன் கூறினார்கள். அதன் பொருளை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். கடவுளின் அவதாரம் எனக்கூறி நான் வழிபடுபவரை நானே விமர்சிப்பது என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று. ஆனால் புத்தர் பெருமானை அவரது சீடர்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் எங்கள் கருத்து. இந்து மதத்திற்கும் (நான் இந்து மதம எனக்குறிப்பிடுவது வேத மதத்தைத் தான்) இந்நாளில் பெளத்தமதம் என்று கூறப்படுகிறதே அதற்கும் உறவு, யூத மதத்திற்கும் கிறிஸ்தவ மதத்திற்கும் உள்ள உறவுதான்.

ஏசு கிறிஸ்து ஒரு யூதர். சாக்கிய முனிவர் ஓர் இந்து. யூதர்கள் கிறிஸ்துவை ஒதுக்கித் தள்ளியது மட்டுமின்றி, அவரைச் சிலுவையிலும் அறைந்தார்கள். இந்துக்கள் சாக்கிய முனிவரைக் கடவுள் என்று ஏற்று வணங்குகிறார்கள். இந்துக்களாகிய நாங்கள் எடுத்துக் கூற விரும்பும், தற்கால பெளத்த மதத்திற்கும் புத்தபகவானின் உண்மை உபதேசத்திற்கும் உள்ள முக்கியமான வேறுபாடு என்னவென்றால், சாக்கிய முனிவர் எதையும் புதிதாக உபதேசிக்க வரவில்லை என்பது தான். அவரும் ஏசுநாதரைப் போன்று, நிறைவு செய்யவே வந்தார், அழிக்க வரவில்லை.

ஏசுநாதர் விஷயத்தில், பழைய மக்களாகிய யூதர்கள் தாம் அவரைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. புத்தர் விஷயத்தில், அவரைப் பின்பற்றியவர்களே அவரது உபதேசங்களின் கருத்தை உணரவில்லை. பழைய ஏற்பாடு நிறைவு செய்யப்படுவதை யூதர்கள் புரிந்து கொள்ளாதது போன்று, இந்து மத உண்மைகள் நிறைவு செய்யப்படுவதை பெளத்தர்கள் அறிந்து கொள்ளவில்லை. மீண்டும் சொல்கிறேன்: சாக்கிய முனிவர் இந்துமதக் கொள்கைகளை அழிக்க வரவில்லை. ஆனால் இந்து மதத்தின் நிறைவு, அதன் சரியான முடிவு. அதன் சரியான வளர்ச்சி எல்லாம் அவரே.
இந்து மதம் இரு பாகங்களாகப் பிரிந்து உள்ளது. ஒன்று கர்ம காண்டம், மற்றொன்று ஞான காண்டம். ஞான காண்டத்தைத் துறவிகள் சிறப்பாகக் கருதுகின்றனர். இதில் ஜாதி கிடையாது. மிக உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவரும் மிகத் தாழ்ந்த ஜாதியில் பிறந்தவரும் துறவியாகலாம். அப்போது அந்த இரண்டு ஜாதிகளும் சமமாகி விடுகின்றன.

மதத்திற்கு ஜாதியில்லை. ஜாதி என்பது வெறும் சமுதாய ஏற்பாடு. சாக்கிய முனிவரே ஒரு துறவி தான். வேதங்களில் மறைந்து கிடந்த உண்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகம் முழுவதற்கும் தாராள மனத்துடன் பரவச் செய்த பெருமைக்கு உரியவர் அவர். உலகத்திலேயே முதன் முதலாக சமயப் பிரசாரத்தைச் செயல்படுத்தியவர், ஏன், மதமாற்றம் என்ற கருத்தை உருவாக்கியவரே அவர் தான்.

எல்லாரிடமும், குறிப்பாக, பாமரர்களிடமும் ஏழை எளியவரிடமும், ஆச்சரியப்படும் வகையில் பரிவு காட்டிய பெரும் புகழுக்கு உரியவர் அவர். அவரது சீடர்களுள் சிலர் பிராமணர்கள். புத்தர் தேசம் செய்த காலத்தில், சமஸ்கிருதம் பேச்சு மொழியாக இல்லை. பண்டிதர்களின் நூல்களில் மட்டுமே அந்த மொழி இருந்தது. புத்தரின் பிராமணச் சீடர்களுள் சிலர், அவரது உபதேசங்களை சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்க விரும்பினர். அதற்கு அவர், 'நான் ஏழைகளுக்காக வாழ்பவன், மக்களுக்காக வாழ்பவன். என்னை மக்களின் மொழியிலேயே பேச விடுங்கள்' என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். அதனால் தான் இன்றளவும், அவரது போதனைகளில் பெரும் பகுதி, அந்நாளைய பேச்சு மொழியிலேயே உள்ளது.

தத்துவ சாஸ்திரத்தின் நிலை என்னவாகவும் இருக்கட்டும், மெய்ஞ்ஞான நிலை என்னவாகவும் இருக்கட்டும், உலகத்தில் மரணம் என்ற ஒன்று உள்ளவரையில், மனித இதயத்தில் பலவீனம் என்புது இருக்கும் வரையில், மனிதனின் பலவீனம் காரணமாக,அவன் இதயத்திலிருந்து எழும் கூக்குரல் இருக்கும் வரை, கடவுள் மீது நம்பிக்கை இருந்தே தீரும்.

தத்துவ சாஸ்திரத்தைப் பொறுத்தவரை, புத்த தேவரின் சீடர்கள் நிலையான மலைபோன்ற வேதங்களோடு மோதிப் பார்த்தார்கள். ஆனால் அவற்றை அழிக்க முடியவில்லை. மற்றொரு புறம் அவர்கள் ஆண், பெண், அனைவரும் பாசத்தோடு பற்றிக் கொண்டிருந்த அழிவற்ற இறைவனை நாட்டினின்று எடுத்துச் சென்று விட்டார்கள். அதன் பயன், பெளத்தமதம் இந்தியாவில் இயற்கை மரணம் எய்தியது. அது பிறந்த நாட்டிலேயே, பெளத்தன் என்று கூறிக்கொள்ள ஒருவர் கூட இன்று இல்லை.

அதே வேளையில், பிராமண சமுதாயத்திற்குச் சில இழப்புகள் ஏற்பட்டன. சீர்திருத்தும் ஆர்வம், எல்லாரிடமும் வியக்கத்தக்க வகையில் பரிவும் இரக்கமும் காட்டல், பக்குவமாய் மாற்றியமைக்கும இங்கிதப் பாங்கு முதலிய பெளத்தப் பண்புகளை பிராமண சமுதாயம் இழந்தது. இந்தப் பண்புகள் தாம் இந்தியாவைப் பெருமையுறச் செய்திருந்தது. அந்நாளைய இந்தியாவைப் பற்றி, ஒரு கிரேக்க வரலாற்று ஆசிரியர், 'பொய் சொல்லும் இந்துவையோ, கற்பிழந்த இந்துப் பெண்ணையோ நான் பார்க்கவில்லை' என்று கூறுகிறார்.

புத்த மதமின்றி இந்து மதம் வாழ முடியாது. அவ்வாறே இந்து மதமின்றி புத்த மதமும் வாழ முடியாது. பிரிவின் காரணமாக என்ன நேர்ந்ததென்று பாருங்கள்! பிராமணர்களின் நுண்ணறிவும், தத்துவ ஞானமுமின்றி பெளத்தர்கள் நிலைத்து வாழ முடியாது. பெளத்தர்களின் இதயமின்றி பிராமணர்களும் வாழ முடியாது. பெளத்தர்களும் பிராமணர்களும் பிரிந்ததுதான் இந்தியாவின் வீழ்ச்சிக்குக் காரணம். அதனால் தான் இந்தியா முப்பது கோடி பிச்சைக்காரர்களின் இருப்பிடமாகி விட்டது. கடந்த ஆயிரம் ஆண்டுகளாக நாடு பிடிப்பவர்களின் அடிமையாக இருக்கிறது. ஆகவே பிராமணனின் அற்புதமான நுண்ணறிவையும், புத்தரின் இதயம், உயர்ந்த உள்ளம், வியப்பிற்குரிய மனிதாபிமானம் இவற்றையும் ஒன்று சேர்ப்போமாக!
—