அகிம்சையின் வல்லமையை உலகுக்கு உரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்தநாள் - சர்வதேச அகிம்சை தினம்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 1:04 | Best Blogger Tips
இன்று - அக்.2 : அகிம்சையின் வல்லமையை உலகுக்கு உரைத்த உத்தமர் காந்தியடிகளின் பிறந்தநாள் - சர்வதேச அகிம்சை தினம்.

காந்தி, அரிச்சந்திரனின் ரசிகர். சத்திய சோதனையாளர். அரையாடைப் பக்கிரி, அகிம்சைப் போராளி... நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 25 தகவல்கள்...

* மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியாக 1869 அக்டோபர் 2-ல் பிறந்தார். மகாத்மா காந்தியாக 1948 ஜனவரி 30-ல் மறைந்தார். காந்தியின் பிறந்தநாள் உலகம் எங்கும் சர்வதேச அகிம்சை தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது!

* காந்தி பிறந்த அக்டோபர் 2-ம் தேதி நாட்டின் மூன்றாவது மற்றும் இறுதி தேசிய விடுமுறை, குடியரசு தினம், சுதந்திரம் தினம் ஆகியவை மற்ற இரண்டு விடுமுறைகள்!

* முதன்முதலில் 'தேசத் தந்தை' என்று காந்தியை அழைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 'மகாத்மா' என்று அழைத்தவர் ரவீந்திரநாத் தாகூர்!

* காந்தி தொடங்கிய 'இந்தியன் ஒப்பீனியன்' குஜராத்தி. இந்தி, தமிழ் மற்றும் ஆங்கிலம் என நான்கு மொழிகளில் வெளியானது!

* தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இவர் வைத்த பெயர்தான் 'ஹரிஜன்' என்பது, அதன் பொருள், 'கடவுளின் குழந்தைள்'!

* 'உடற் பயிற்சியின் அரசன் நடைப் பயிற்சி' என்று சொன்ன காந்தி, லண்டனில் சட்டம் பயிலும்போது, ஒரு நாளைக்கு 10 மைல்கள் நடந்தே சென்று காசை மிச்சப்படுத்திப் படித்தார்!

* காந்தி ஒரு துறவியைப் போன்றவர்தான், அனால், அவரிடம் நகைச்சுவை உணர்வுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. 1931-ல் லண்டனுக்குச் சென்றபோது, பிரிட்டிஷ் அரசரை முதலும் கடைசியுமாகச் சந்தித்தார் காந்தி. ஆறாம் ஜார்ஜ் மன்னரைச் சந்தித்துவிட்டு பக்கிங்ஹாம் அரண்மனையைவிட்டு அவர் வெளியில் வந்தபோது, அவரைப் பத்திரிகையாளர்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒருவர், இவ்வளவு குறைவான ஆடையுடன் வந்திருக்கிறீர்களே குளிரவில்லையா' என்று கேட்டார். 'எங்கள் இருவருக்கும் தேவையான அளவு ஆடைகளையும் சேர்த்து மன்னரே அணிந்திருந்தார்' என்று பதில் அளித்தார் காந்தி!

* வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது, காந்தி சொன்ன வாக்கியம்தான்..... 'செய் அல்லது செத்து மடி!'

* கொள்கை இல்லாத அரசியல் வேலை செய்யாமல் வரும் செல்வம், மனசாட்சியை ஏமாற்றி வரும் இன்பம், பண்பு இல்லாத அறிவு, நியாயம் இல்லாத வணிகம், மனிதம் மறந்த அறிவியல், தியாகம் இல்லாத வழிபாடு'. இவை காந்தி குறிப்பிட்ட ஏழு சமூகப் பாவச் செயல்கள்!

* தபால் அட்டைகள்தான் உள்ளதிலேயே மிகவும் சிக்கனமான தகவல் தொடர்புச் சாதனம் என்று கருதியவர் காந்தி'!

* கடிதங்கள் மிக நேர்த்தியாக மடிக்கப்பட்ட பின்பே உறையில் இட வேண்டும் என்பதில் உறுதியுடன் இருப்பார். காரணம், கடிதம் மடிக்கப்பட்டு இருக்கும் முறையிலேயே உங்களைப்பற்றிய அபிப்ராயம் தோன்றிவிடும் என்பார்!'

* யாருக்குக் கடிதம் எழுதினாலும் 'தங்களின் கீழ்ப்படிந்த சேவகன்' என்று எழுதியே கடிதத்தை முடிப்பார்!

* கிழிந்த துணிகளைத் தானே தைத்துக்கொள்வார். எவ்வளவுதான் வறுமையில் ஒருவர் இருந்தாலும், உடுத்துகின்ற உடைகள் மிகத் தூய்மையாக இருக்க வேண்டும் என்பார். அதை அவரும் கடைப்பிடித்தார்!

* ஒவ்வொரு இரவும் நாட்குறிப்பு எழுதும் பழக்கம்கொண்டவராக இருந்தார். அதுதான் பின்னாளில் அவரின் சுயசரிதையாகவும் மலர்ந்தது!.

* 'சட்ட மறுப்பு இயக்கப் போராட்டத்தைக் கைவிடுங்கள்' என்று வெள்ளையர்கள் சொன்னபோது, அதற்கு காந்தி, தன் 11 அம்சத் திட்டத்தை ஏற்றுக்கொண்டால், போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தார். அதில் 11-வதாக இருந்த திட்டம், 'சுய பாதுகாப்புக்குத் தேவையான வெடி பொருட்களையும் ஆயுதங்களையும் தயாரித்துக்கொள்வதற்கான உரிமம் வழங்குதல்.' அகிம்சையைப் போதித்தவருக்குள் எப்படி இந்த எண்ணம் உதித்தது என்பது இன்று வரை பலரின் கேள்வி!

* எந்த நிலையிலும் ஆங்கிலேயரை உடல் அளவில் காயப்படுத்துவதை அவர் அனுமதிக்கவில்லை. 'நாம் அவர்களை எதிர்த்துப் போராடவில்லை. அவர்கள் நம் மீது திணிக்கும் அதிகாரத்தைத்தான் எதிர்க்கிறோம்' என்று அதற்கு விளக்கமும் அளித்தார்!.

* தான் தவறு செய்தால், அதற்காக மெளன விரதம் ஏற்பதும்... பிறர் தவறு செய்தால், அந்தத் தவறு செய்தவர் அதை உணர தான் உண்ணாவிரதம் இருப்பதையும் வாடிக்கையாகக்கொண்டு இருந்தார். இந்த குணம், அவர் தாய் புத்தலிபாயிடம் இருந்து வந்ததாகும்!.

* ஆரம்ப காலங்களில், ஆசிரமத்தில் நடக்கும் தினசரி பிராத்தனைக் கூட்டங்களில், 'கடவுள் உண்மையானவர்!' என்று சொல்லிவந்தார். விடுதலைப் போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, 'உண்மையே கடவுள்' என்று மாற்றிக்கொண்டார்!.

* இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் காந்தியின் தபால் தலையை வெளியிட்ட நாடு எது தெரியுமா? அவர் தன் வாழ்நாளியில் மிதிக்காத நாடான அமெரிக்காதான் அது. இது நடந்தது 1961 ஜனவரி 26-ல்!.

* ராட்டைச் சக்கரத்துக்கு முன் காந்தி அமர்ந்து இருப்பதுபோல இருக்கும் புகழ்பெற்ற புகைப்படம், மார்கேட் பூர்க் ஒயிட் என்பவரால் பிரபல லைஃப் இதழுக்காக எடுக்கப்பட்டது!.

* 'என்னிடம் சீடனாக வந்து சேர்ந்த குரு' என்று காந்தி அழைத்து வினோபா பாவேவைத்தான்!.

* மார்டின் லூதர்கிங், தலாய் லாமா, ஆங் சான் சூகி, நெல்சன் மண்டேலா,அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம், காந்திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள்.ஆனால், காந்திக்கு நோபல் பரிசு தரவில்லை!.

* இந்தியா சுகந்திரம் அடைந்தபோது, அதைக் கொண்டாட மறுத்தவர்கள் இரண்டு பேர். ஒருவர் காந்தி, இன்னொருவர் தந்தை பெரியார்!.

* போர்பந்தரில் பிறந்த காந்தி ஆரம்பித்த சபர்மதி ஆஸ்ரமத்தின் நினைவாகத்தான் 'சபர்மதி எக்ஸ்பிரஸ்' ரயில் விடப்பட்டது.ஆனால், 2002-ம் ஆண்டு கோத்ரா சம்பவத்தில் இந்த ரயில் எரிக்கப்பட்டு, குஜராத் கலவரத்துக்கு வித்திடப்பட்டது.காலத்தின் முரண்களில் இதுவும் ஒன்று!.

* 'கனவில் இருந்து நிஜத்துக்கு, இருளில் இருந்து வெளிச்சத்துக்கு, மரணத்தில் இருந்து அமரத்துவத்துக்கு!'- காந்தி நினைவு மண்டபத்தில் எழுதிவைக்கப்பட்டு இருக்கும் வாசகம் இது!