தஞ்சை பொிய கோவில் வரலாறும் சிறப்பும்

மணக்கால் அய்யம்பேட்டை | 7:36 PM | Best Blogger Tips


அந்தக் கோவில் கட்டுமானத்தில் சுடு செங்கல் இல்லை. மரம் இல்லை. சொறிகல் என்ற பூராங்கல் இல்லை. மொத்தமும் கருங்கல். நீலம் ஓடிய, சிவப்பு படர்ந்த கருங்கல். உயர்ந்த கிரானைட். இரண்டு கோபுரங்கள் தாண்டி, விமானம் முழுவதும் கண்களில் ஏந்திய அந்தக் கோவிலின் நீளமும், அகலமும், உயரமும் பார்க்கும்போது, வெறும் வண்டல் மண் நிறைந்த அந்தப் பகுதிக்கு இத்தனை கற்கள் எங்கிருந்து வந்தன, எதில் ஏற்றி, இறக்கினர், எப்படி இழுத்து வந்தனர், எத்தனை பேர், எத்தனை நாள், எவர் திட்டம், என்ன கணக்கு.

இந்தக் கருங்கற்களை செதுக்க என்ன உளி, என்ன வகை இரும்பு, எது நெம்பி தூக்கியது, கயிறு உண்டா, கப்பிகள் எத்தனை, இரும்பு உண்டெனில், பழுக்கக் காய்ச்சி உரமேற்றும் உத்தி (Heat Treatment) தெரிந்திருக்க வேண்டுமே. இரும்பை சூடாக்கி எதில் முக்கினர். தண்ணீரிலா, எண்ணெயிலா. நெருப்பில் கனிந்த இரும்பை எண்ணெயில் முக்கும் கலை, (oil quenching) ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உண்டா. எத்தனை பேருக்கு எவ்வளவு சாப்பாடு. அரிசி, காய்கறி எங்கிருந்து. சமையல் பாத்திரம் எத்தனை. படுத்துறங்க எங்கு வசதி. மறைவு வசதிகளுக்கு நீர்த்துறை எது.

மனிதருக்கு உதவியாய், யானைகள், மாடுகள், குதிரைகள், கழுதைகள் உண்டெனில், அதற்கு உணவும், அவற்றைப் பழக்கி உபயோகப்படுத்துவோரும் எத்தனை பேர். அத்தனை பேரும் ஆண்கள் தானா. கோவில் கட்டுவதில் பெண்களுக்கும் பங்குண்டா. தரை பெருக்கி, மண் சுமந்து, பளு தூக்குவோருக்கு மோர் கொடுத்து விசிறிவிட்டு, இரவு ஆட்டம் ஆடி, நாடகம் போட்டு, பாட்டு பாடி, அவர்களும் தங்கள் பங்கை வழங்கியிருப்பரோ. இத்தனை நடவடிக்கையில், உழைப்பாளிகளுக்கு காயம் படாதிருந்திருக்குமா. ஆமெனில், என்ன வைத்தியம். எத்தனை பேருக்கு எவ்வளவு வைத்தியர். இத்தனை செலவுக்கும், கணக்கு வழக்கென்ன, பணப்பரிமாற்றம் எப்படி. பொன்னா, வெள்ளியா, செப்புக்காசா. ஒரு காசுக்கு எத்தனை வாழைப்பழம். என்னவித பொருளாதாரம். உணவுக்கு எண்ணெய், நெய், பால், பருப்பு, மாமிசம், உப்பு, துணிமணி, வாசனை அணிகலன்கள் இருந்திருக்குமா. பாதுகாப்பு வீரர்கள் உண்டா. வேலை ஆட்களுக்குள் பிரச்னையெனில், பஞ்சாயத்து உண்டா. என்ன வகை சட்டம். எவர் நீதிபதி. இவை அத்தனையும், ஒரு தனி மனிதன், ஒரு அரசன் நிர்வகித்தானா. அவன் பெயர் தான் அருண்மொழி என்ற ராஜராஜனா.

யோசிக்க யோசிக்க, மனம் மிகப் பெரிதாய் விரிவடைகிறது. இது கோவிலா. வழிபாட்டுத் தலமா. வெறும் சைவ சமயத்துக்குண்டான கற்றளியா. இல்லை. இது ஒரு ஆற்றங்கரை நாகரீகத்தின் வரலாற்றுப் பதிவு. திராவிடம் என்று வடமொழியில் அழைக்கப்பட்ட தமிழ் மக்களின் அறிவுத் திறமைக்கு, கற்களால் கட்டப்பட்டத் திரை. காலம் அழிக்க முடியாத சான்றிதழ். காவிரிக்கரை மனிதர்களின் சூட்சம குணத்தின் வெளிப்பாடு. விதவிதமான கலைகளின், மனித நுட்பத்தின் மனத் திண்மையின் ஒருமித்த சின்னம். முப்பத்தாறு அடி உயர ஒற்றைக்கல், இருவர் கட்டிப்பிடிக்க முடியாத அகலம். இதுபோல பல கற்கள், முன்பக்க கோபுரங்களிலும் தாங்கு பகுதியாக இருக்கிறது.

திருச்சிக்கு சற்று தெற்கே உள்ள கீரனூர் தாண்டி இருக்கிற நார்த்தாமலையிலிருந்து வந்திருக்கிறது. கிட்டத்தட்ட அறுபது கிலோ மீட்டர். எப்படி கொண்டு வந்தனர் இவ்வளவு பெரிய கற்பாறைகளை. பல்சகடப் பெரு வண்டிகள். பல சக்கரங்கள் பொருத்தப்பட்ட வண்டிகள், மாடுகள் இழுத்தும், யானைகள் நெட்டித் தள்ளியும் வந்திருக்கின்றன. அந்த வழியில் ஒரு ஆறு கூட இல்லை. மலை தாண்ட வேண்டாம். மணல் பகுதி இல்லை. சரியான, சமமான பாதை. வழியெல்லாம் மரங்கள். அந்த நார்த்தாமலையில், ஆயிரம் வருடத்துக் கோவிலும் இருக்கிறது. வெட்டிய இடத்திலேயே வேண்டிக் கொள்ள கோவில் கட்டியிருக்கின்றனர்.

எப்படி மேலே போயிற்று. இத்தனை உயரம். விமானம் கட்டக்கட்ட, வண்டிப்பாதையை கெட்டியான மண்ணால் அமைத்திருக்கின்றனர். இரண்டு யானைகள் எதிரும், புதிருமாய் போவதற்கான அகலத்தில் கற்பலகைகள், மனிதர்களாலும், மிருகங்களாலும், மேலே அந்த சுழல் பாதையில் அனுப்பப்பட்டன. உச்சிக்கவசம் வரை வண்டிப்பாதை நீண்டது. அதாவது, கலசம் பொருத்தும்போது, விமானம் வெறும் களிமண் குன்றாய் இருந்திருக்கும். பிறகு...? மெல்ல மெல்ல மண் அகற்றப்பட்டிருக்கும். ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் மண் அகற்றி, தொலைதூரம் போய் குவித்திருக்கின்றனர். குவிக்கப்பட்ட இடம் இப்போதும் இருக்கிறது. "சாரப்பள்ளம் என்ற இடத்திலிருந்து சாரம் அமைத்து' என்று சொல்கின்றனரே... வாய்ப்பே இல்லை. அத்தனை உயரம் சாரம். கற்பாறைகளைத் தாங்கும் கனத்தோடு கட்டப்பட்டிருக்காது. சாத்தியமே கிடையாது. நொறுங்கி விழுந்திருக்கும். அப்படியானால் சாரப்பள்ளம். சாரம் போட, அதாவது மண்பாதை போட மண் தோண்டப்பட்ட இடம் பள்ளமாயிற்று. சாரம் போட தோண்டப்பட்ட போது உண்டான பள்ளம் சாரப்பள்ளம். இத்தனை மனிதர்கள் எப்படி. உழைப்பாளிகள் எங்கிருந்து.

வேறெதற்கு போர்? பாண்டிய தேசம், சேர தேசம், இலங்கை, கீழ சாளுக்கியம், மேல சாளுக்கியம் என்று பரவி, எல்லா இடத்திலிருந்தும், மனிதர்களும், மிருகங்களும், பொன்னும், மணியும், மற்ற உலோகங்களும், அதற்குண்டான கைவினைஞர்களும் இங்கே குவிக்கப்பட்டிருக்கின்றனர். கோவில் கட்ட போரா; போர் செய்து ஜெயித்ததால் கோவிலா. இரண்டும் தான். சோழர்கள் போர் செய்யப் போகவில்லை எனில், பாண்டியர்கள் மேலை சாளுக்கியர்கள் போர் துவக்கி ஜெயித்திருப்பர். (வெகு காலம் கழித்து ஜெயித்தனர்.) எனவே, எதிரியை அடக்கியது போலவும் ஆயிற்று, இறைபணி செய்தது போலவும் ஆயிற்று. இது சோழ தேசத்து அரசியல் சாணக்கியம். கல் செதுக்க விதவிதமான சிற்பிகள். மேல் பகுதி நீக்க சிலர். தூண், வெறும் பலகை, அடுக்குப்பாறை செய்ய சிலர். அளவு பார்த்து அடுக்க சிலர். கருவறைக் கடவுள் சிலைகள் செய்ய சிலர் என்று பலவகையினர் உண்டு. உளிகள், நல்ல எக்கு இரும்பால் ஆனவை. பெரிய கல் தொட்டியில் எண்ணெய் ஊற்றி, பழுக்க காய்ச்சிய உளிகளை சட்டென்று எண்ணெயில் இறக்க, இரும்பு இறுகும். கல் செதுக்கும் கோவிலுக்குள், இப்படிப்பட்ட கல்தொட்டி இன்னும் இருக்கிறது. கயிறு, கம்பிகள் சிறிதளவே பயன்பட்டன. உயரப் பலகைகள் போட மண் உபயோகப்பட்டது.

எல்லா ஊரிலிருந்தும், தஞ்சைக்கு உணவு தானியங்கள் வந்திருக்க வேண்டும். ஆடுகள் அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆடுகள் வளர்ப்பது ஒரு கலையாக, கடமையாக இருந்திருக்கிறது. "சாவா மூவா பேராடுகள்' என்ற வாக்கியம் வழக்கத்தில் இருந்திருக்கிறது. 96 ஆடுகள் இருப்பினும், அந்த ஆட்டுக் கூட்டம் குறையாது. குட்டி போட்டு வளரும். வளர்க்கப்பட வேண்டும். நல்ல மருத்துவமனைகள் கட்டப்பட்டிருக்கின்றன. விதவிதமான மருந்துப் பெயர்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அறுவை சிகிச்சை தெரிந்தவர்கள் இருந்திருக்கின்றனர். மருத்துவமனை சார்ந்த தொழிலாளர்கள் உண்டு. மருந்துக் கிடங்கு உண்டு. மூலிகை தேடி சேகரிப்போர் உண்டு. நீர் ஊற்றுபவர் உண்டு. கணக்கு வழக்குகள், ஓலைச் சுவடிகளில் பதிவு பெற்றிருக்கின்றன. துல்லியமான கணக்கு வைக்கப்பட்டிருக்கிறது. தானங்கள் கல்வெட்டாய், குன்றிமணி தங்கம் கூட பிசகாமல் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதைச் சொல்ல ஒரு ஆள். செதுக்க ஒரு ஆள். நேர் பார்க்க ஒரு ஆள். வீரர்களுக்குள் சண்டை நடந்ததெனில், பஞ்சாயத்து நடந்ததற்கான கல்வெட்டுகள் உண்டு.

மாமன்னர் ராஜராஜன் கண்ட விற்போர் உண்டு. ஒண்டிக்கு ஒண்டி சண்டை செய்ய விட்டிருக்கின்றனர். (Duel). இதில் ஒருவன் தப்பாட்டம் ஆடி இருவருமே இறந்ததால், இருவரின் மனக்கேதமும் தீர்க்க, கோவில் விளக்கெரிக்க வேண்டி, யார் மனஸ்தாபத்திற்குக் காரணமோ, அவர்களுக்கு அபராதம் விதித்திருக்கின்றனர். 96 ஆடுகள் அபராதம். அதாவது, சாவா மூவா பேராடுகள். தஞ்சையிலுள்ள ஒரு கோவிலில் இக்கல்வெட்டு இருக்கிறது.

கோவில் கட்டியாகி விட்டது. நிர்வகிக்க யார் யார். அவருக்கென்று வீடு ஒதுக்கி, வீட்டு இலக்கம் சொல்லி, பெயர் எழுதி, கல்வெட்டாய் வெட்டியிருக்கிறது. இடது சிறகு மூன்றாம் வீடு, நக்கன் பரமிக்கு பங்கு ஒன்றும், இடது சிறகு நான்காம் வீட்டு எச்சுமண்டைக்கு பங்கு ஒன்றும் என்று பல நூறு பெயர்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. வீணை வாசிக்கும் ஆதிச்சன் இறந்தமையால், அவன் மகனுக்குப் பங்கு அரையும் என்று சம்பளம் குறைக்கப்பட்டிருக்கிறது. கோவில் பணியில் உள்ள எல்லா தொழிலாளர்கள் பெயரும், தொழிலும் எழுதப்பட்டிருக்கின்றன. அது மட்டுமல்ல, கோவிலுக்கு யார் தானம் தந்தனரோ, அவர்கள் தந்தது சிறு தொகையானாலும், பெரிய தொகையானாலும், தங்க ஆபரணமானாலும், கல்லில் வெட்டப்பட்டிருக்கிறது. முதல் தானம் ராஜராஜனுடையது. "நாங்கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும்' என்று கல்வெட்டு துவங்குகிறது. தான் மட்டும் இக்கோவிலைக் கட்டியதாய் ஒரு சிறு நினைப்பு கூட அந்த மாமனிதனுக்கு இல்லை. கோவில் கட்டிய இந்த மனிதர்கள் எப்படி இருப்பர். கொஞ்சம் தெரிய வருகிறது.

விமானத்தினுள்ளே உயிர் ஓவியங்கள் உள்ளன. சட்டை அணிந்த தளபதிகள், பூணூல் அணிந்த அந்தணர்கள், இடுப்பில் பாவாடையும், மேல் போர்வையும் அணிந்த அரசிகள், இடதுபக்க பெரிய கொண்டையோடு, தாடியோடு மாமன்னர் ராஜராஜன், அலங்காரமான, மிக அழகான கறுப்பு, சிவப்பு, மாநிறம் கொண்ட தேவரடியார்கள் என்று அழைக்கப்பட்ட நடனமாதர்கள், சிதம்பரம் கோவில் நடராஜர், விதவிதமான முகங்கள்; ஒன்று போல் ஒன்று இல்லை. உயிர் ததும்பும் முகபாவங்கள். தட்டை ஓவியங்கள். ஆனால், தெளிவாகத் தெரியும் ஒரு உலகம். மாமன்னர் ராஜராஜனைக் கோவில் கட்டத் தூண்டியது எது. போரா கலைஞர்கள் செய்திறனா. இல்லை. பெரிய புராணம் என்ற திருத்தொண்டர் புராணம் முக்கிய தூண்டுதல். கோபுர வாசலில் உள்ள சுவர்களில், சிறிய சிறிய சிற்பங்கள் தெரிகின்றன. கண்ணப்ப நாயனார், பூசலார், கண்டேஸ்வரர் மன்மத தகனம் என்று, முக்கால் அடி உயர பதுமைகளைச் செதுக்கி வித்தை காட்டியிருக்கின்றனர். அடுத்த விநாடி குழந்தை பிறக்கும் என்ற தாயின் உருவம், மன்னர் முகங்கள், புராண காட்சிகள் எல்லாம், கோவில் கோபுரங்களில் உண்டு.

இது என்னவித கோவில்- விமானம் உயரம். மிக உயரம். கோபுரங்கள் சிறியவை. இது ஆகம விதியா. புதிய சிற்ப சாஸ்திரமா. உள்ளே நுழைந்ததும் நந்தியை மனதால் அகற்றிவிடுங்கள். எதிரே உள்ள விமானம் தான் சிவலிங்கம். வானம் ஒரு சிவலிங்கம். விமானத்திற்குள் உள்ள வெளி ஒரு சிவலிங்கம். வெளிக்கு நடுவே கருவறையில் கருங்கல் சிவலிங்கம். எல்லாம் சிவமயம். இந்த விமானத்திற்கு மாமன்னர் ராஜராஜன் வைத்த பெயர், "தென்திசை மேரு!' உள்ளே கடவுள் பெயர் பிரகதீஸ்வரர். தமிழில் பெரு உடையார். வடக்கே உள்ள கைலாயத்தின் மீது காதல். கைலாயம் போகவில்லை. கைலாயத்தை இங்கே கொண்டுவந்துவிட்ட உடையார் பெரிய உடையார், இது போதுமா கடவுளைச் சொல்ல. ரொம்ப பெரிசு ஐயா கடவுள். கருவறைக்கு அருகே உள்ள துவாரபாலகர் கட்டுகிறார். பதினேழு அடி உயரம். அவர் கால், கதை, கதையைச் சுற்றி மலைப்பாம்பு. மலைப்பாம்பு வாயில் பெரிய யானை. அதாவது, யானையை விழுங்கும் பாம்பு. பாம்பு சுற்றிய கதை. கதையில் கால் வைத்த துவாரபாலகர், அவர் கை விஸ்மயம் என்ற முத்திரை காட்டுகிறது. உள்ளே இருப்பதை விவரிக்க முடியாது என்று கை விரிக்கிறது. விவரிக்கவே முடியாத சக்திக்கு, கடவுளுக்கு, தன்னாலான அடையாளம் காட்டியிருக்கிறார் மாமன்னர் ராஜராஜன். அதுவே பிரகதீஸ்வரம். அதுவும் விஸ்வரூபம், இன்றளவும்.

- எழுத்துச் சித்தர் பாலகுமாரன்
Via Sakthi Vikatan

திருவாரூர் தியாகராஜர் கோயில்

மணக்கால் அய்யம்பேட்டை | 6:45 PM | Best Blogger Tips

கோயில் அமைப்பு


33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்துள்ளன. இந்தக் கோயிலை சுற்றிப் பார்க்கவே, முழுமையாக ஒருநாள் ஆகும்.

கோயில் வரலாறு


இக்கோயில் இடைக்காலச் சோழர்கள் காலத்தில் கற்கோயிலாக கட்டப்பெற்றதாகும். அதற்கு முன்பு மகேந்திரப் பல்லவன் காலத்தில் செங்கல் கோயிலாக இருந்திருக்க வேண்டும். சோழப் பேரரசர் கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் கட்டப்பெற்ற கற்றளியை உடையது. சோழர்கள் மட்டுமல்லாமல், பல்லவர்கள், பாண்டியர்கள், விஜயநகர், தஞ்சை நாயக்கர் மற்றும் மராத்திய மன்னர்களும் தத்தம் ஆட்சியில் இக்கோயிலுக்கு ஆதரவளித்துள்ளார்கள்.

தலச்சிறப்பு


இக்கோயிலில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளது. ஒன்றில் வான்மீகிநாதர் என்றும் மற்றொன்றில் தியாகராஜர் என்றும் சிவபெருமானுக்கு திருநாமங்கள். இவற்றில் வான்மீகி நாதர் சந்நிதி மிகவும் பழமையானது. இதில் அமைந்திருக்கும் லிங்கம் புற்றிலிருந்து சுயம்புவாக தோன்றியதாக வழங்கப்படுகிறது. அப்பர் சுவாமிகள் இதனால் சிவபெருமானைப் புற்றிடங்கொண்டார் என்ற பெயரால் அழைக்கிறார். இத்தலத்தின் தொன்மையை வியக்கும் அப்பர் சுவாமிகள், சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையுமாய் சொல்லி, அந்த திருவிளையாடல் நடப்பதற்கு முன்பாகவா, அல்லது பின்பாகவா, திருவாரூரில் எழுந்தருளிய நாள் என வினவுகிறார்.

இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் தியாகராஜர் முதலில் திருமாலால் திருப்பாற்கடலில் வழிபடப்பெற்றவர். பிறகு அவரால் இந்திரனுக்கும், பிறகு இந்திரனால் முசுகுந்த சக்கரவர்த்திக்கும் அளிக்கப்பெற்று, அந்த முசுகுந்த சக்கரவர்த்தியால் இவ்வூரில் பிரதிட்டை செய்யப்பெற்றவர்.

தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர, மற்ற நாட்களில் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் சமயம் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

சமயக்குரவர்களாலும் இதர நாயன்மார்களாலும் பாடற்பெற்ற தலம். அரநெறி நமிநந்தியடிகள் நாயனார் தண்ணீரால் திருவிளக்கேற்றி வைத்து வழிபட்ட திருக்கோயிலாகும். சுந்தரமூர்த்தி நாயனார் பொருட்டுப் பரவை நாச்சியாரிடம் சிவபெருமான் இருமுறை நள்ளிரவில் தூது நடந்து சென்ற திருவீதியை உடையது. இச்செய்தியை "அடியேற்கு எளிவந்த தூதனை" என்னும் அவரது தேவாரப் பகுதி உறுதிப்படுத்தும். காஞ்சிபுரத்தில் ஒருகண் பெற்ற அவர் ``மீளா அடிமை`` என்று தொடங்கும் திருப்பதிகத்தைப் பாடி மற்றொரு கண்பார்வையும் பெற்றது, இத்தலத்தில்தான்.

திருவாரூர் தேர்


ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா மிகவும் பெயர் பெற்றது. "திருவாரூர் தேரழகு" என்று சிறப்பிட்டுச்சொல்லும் அளவிற்கு புகழ் பெற்றது. இத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களும் பொதுமக்களும் தேரினைக் கோயிலைச் சுற்றி உள்ள வீதிகளில் இழுத்து வருவார்கள்

Via Kum Ar

தேசிய கொடி உருவான வரலாறு !!!

மணக்கால் அய்யம்பேட்டை | 9:14 PM | Best Blogger Tips

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது

கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது . அது சிவப்பு , பச்சை , மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து ,பச்சை நிறம் மேலிலும், இளஞ்சிவப்பு நடுவிலும், சிவப்பு அடியிலும் கொண்டது. பச்சை நிறம் இசுலாமியத்தை குறிப்பதாகவும், இளஞ்சிவப்பு நிறம் இந்துத்துவத்தையும் புத்த மதத்தையும் குறிப்பதாகவும் அமைந்தன. அக்கொடி, பச்சை பாகத்தில் பட்டைகளில் வெண்தாமரை மலர்கள் , வந்தேமாதரம் என்ற வார்த்தைகள் , கதிர்வீசும் ஆதவன் , பிறைசந்திரன் , நட்சத்திரங்கள் என்று அந்தக்கொடி ஆங்கிலேயரின் கீழ் இருந்த எட்டு மாகாணங்களை குறிக்கும் வகையில்,
வரிசையாக எட்டு தாமரைகளை கொண்டது. நடுபாகத்தில், தேவனகிரி எழுத்துருவில், வந்தே மாதரம் என்ற வார்த்தைகள் எழுதப் பட்டது. அடி பாகத்தின் கொடிக் கம்பத்திற்கு அருகில் உள்ள மூலையில், ஒரு பிறைநிலாவையும், இன்னொரு மூலையில் சூரியனையும் கொண்டது. இக்கொடியை . பின்னர் ,

1907 ல் அந்தக் கொடியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டது .8 வெண்தாமரைகளுக்குப் பதிலாக , வானில் ஒளிவீசும் 7 நட்சத்திரங்கள் உருவாக்கப்பட்டு , அந்தக்கொடி பிக்காய்ஜிரஸ் டோம்ஜிகமா அம்மையாரும் , அவரது கூட்டாளிகளும் பாரிஸ் நகரில் 1907 ம் ஆண்டு இந்தக்கொடியை ஏற்றி மகிழ்ந்தனர் .
1917 ம் ஆண்டு மீண்டும் தேசிய கொடி 3 ம் முறையாக மாற்றப்பட்டது . இதை டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையாரும் , பாலகங்காதரதிலகரும் சிவப்புநிற பட்டை ( 5 ) பச்சைநிற பட்டை (4 ) , அடுத்தடுத்து அமைந்த இந்தகொடியின் மேற்பகுதி இடது புறம் சிறிதளவு யூனியன் ஜாக்கும் , வலது புறம் பிறைச்சந்திரன் கூடிய நட்சத்திரமும் , நடுவில் சில நட்சத்திரங்களும் சித்தரிக்கப்பட்டிருந்தன . இக்கொடி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெறவில்லை .

பின்னர் 1921 ம் ஆன்டூ விஜயவாடாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தபோது , பிங்கிலி வெங்கையா என்ற இளைஞர் இந்து , முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்தி காவி , பச்சை நிறங்களில் ஒரு கொடியை வடிவமைத்து காந்தியிடம் கொடுத்தார் . இந்தக்கொடி அனைத்து காங்கிரஸ் கூட்டங்களிலும் பறக்கவிடப்பட்டது .
ஆயினும் பெரும்பாலானோர், வெவ்வேறு மதங்களை உணர்த்துமாறு கொண்ட பொருளை விரும்பவில்லை. 1924ஆம் ஆண்டு கொல்கத்தாவில் குழுமிய அனைத்திந்திய சமசுகிருத குழுமம், இந்துக்களின் கடவுளான விஷ்ணுவின் கதத்தை உணர்த்தும் வகையில் காவி நிறத்தை கொடியில் சேர்க்குமாறு வலியுறுத்தியது. பின்னர், அதே வருடம், மற்ற மதத்தினரும் தத்தம் மதத்தை குறிக்க வெவ்வேறு மாற்றங்களை வலியுறுத்தினர்.

இதனை தொடர்ந்து, 2 ஏப்ரல் 1931ல் காங்கிரசு ஆட்சிக் குழு, அமைத்த ஏழு நபர்கள் அடங்கிய ஒரு கொடிக் குழு, மூன்று வர்ணங்களும் மத உணர்வுகளை தூண்டும் வகையில் அமைந்துள்ளன என்றும், அதற்கு பதிலாக, ஒரே வர்ணமாக, காவி நிறமும் அதில் சக்கரமும் இருக்குமாறு மாற்றியமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. ஆனால் இந்திய தேசிய காங்கிரசு அதனை ஏற்கவில்லை.
பின்னர், 1931 கராச்சியில் கூடிய காங்கிரசு குழு, பிங்கலி வெங்கய்யா வடிவமைத்த, காவி, வெள்ளை, பச்சை வர்ணங்களுடன் நடுவில் சக்கரத்தை கொண்ட கொடியை ஏற்றது. அதிலமைந்த வர்ணங்கள் பின்வருமாறு, காவி நிறம் தைரியத்திற்கெனவும், வெள்ளை நிறம் சத்தியம் மற்றும் அமைதிக்கெனவும், பச்சை நிறம் நம்பிக்கை மற்றும் செம்மைக்கெனவும் பொருளுணரப் பட்டன.

அதே சமயம், ஆசாத் ஹிந்த் என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட, சக்கரத்திற்கு பதிலாக தாவும் புலியை நடுவில் கொண்ட ஒரு கொடியை இந்திய தேசிய படை பயன்படுத்தியது. சக்கரத்திற்கு பதிலாக அமைந்த புலியின் உருவம், மகாத்மா காந்தியின் அகிம்சை வழிகளுக்கு நேர் எதிர் மாறான சுபாசு சந்திரபோசின் வழிகளை உணர்த்துவதாக அமைந்தது. . இரண்டாம் உலகப் போரின் போது, சுபாஸ் சந்திர போஸின் இந்திய தேசிய படை பயன்படுத்திய கொடி.இந்த கொடி தேசிய கொடியா இல்லாவிடிலும் முதல் முதலாக மணிப்பூரில், சுபாசு சந்திர போசு அவர்களால் கொடியேற்றப்பட்டது

விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த
சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது. வெவ்வேறு சமயங்களை உணர்த்துவதாக இருந்த எண்ணத்தை மாற்ற, பின்னாளில் இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்ற சர்வப்பள்ளி இராதாகிருட்டிணன் அவர்கள் புதிதாக ஏற்கப்பட்ட இந்திய தேசியக் கொடியைப் பொருள் பட இவ்வாறு கூறினார்:
பின்னர் , அடர் காவி , அடர் பச்சை , மத்தியில் தூய வெண்மை ஆகிய மூன்று நிறங்களும் , மத்தியிலுள்ள வெண்பட்டையில் கடல்நீல வண்ணத்தில் 24 அரும்புக் கால்களும் கொண்ட ஓர் அசோகச் சக்கரமும் கொண்டு வரையறுக்கபட்ட நீள அகலத்தில் கொடி உருவாக்கப்பட்டது .
இதை 22 – 07 – 1947 ல் இந்திய அரசியல் நிர்ணய சபைகூடிய போது இந்திய தேசியக் கொடியாக அறிவித்து , அதன்பின் , முதன்முதலில் டில்லி செங்கோட்டையில் அதிகாரபூர்வமாக 1947 ம் ஆண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்பட்டது .
இந்தியா குடியரசு நாடாகிய பிறகு, 1951-ல் [இந்திய தரக்கட்டுப்பாட்டுத்துறை]யால் தேசியக்கொடிக்கு முதன்முதலாக அளவுமுறை நிர்ணயிக்கப்பட்டது. இவ்வளவு முறை சர்வதேச அளவுமுறைக்கு ஏற்ப மெட்ரிக் அளவுமுறையாக 1964-ல் மாற்றப்பட்டது. பின்னர் ஆகஸ்ட் 17, 1968 இல் இவ்வளவு முறை மேம்படுத்தப்பட்டது. இவ்வளவு முறை கொடியின் நீள, அகலம், நிறங்களின் அளவு(அடர்த்தி, பளபளப்பு), துணியின் தரம் மற்றும் கொடிக்கயிற்றின் தரத்தைப்பற்றியும் விவரிக்கின்றது. கொடித்தயாரிப்பில் இவ்விகிதாச்சாரங்களை மீறுவது மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு அபராதம் அல்லது சிறைவாசமோ அல்லது இரண்டும் தண்டனையாக வழங்கப்படுகிறது.

கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்பட்கிறது.

காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.
                                                               ஜெய்ஹிந்த் 

manakkal ayyampet kaliamman kovil 2014 - கும்மியாட்டம்

மணக்கால் அய்யம்பேட்டை | 11:08 AM | Best Blogger Tips
மணக்கால் அய்யம்பேட்டை ஆடித் மாத திருவிழா 

 அருள்மிகு செல்லம்மா காளியம்மன் 

வெள்ளிக்கிழமை காலையில் பந்தயார் தெரு - பிள்ளையார் கோவிலில் கும்மியாட்டம்






ஆடி மாதம் அருள்மிகு காளியம்மன் திருவிழா 2014 !

மணக்கால் அய்யம்பேட்டை | 12:54 AM | Best Blogger Tips
அன்புடையீர் வணக்கம் !

வருடந்தோறும் ஆடி மாதம் 3 வது செவ்வாய் கிழமை

மணக்கால் அய்யம்பேட்டையில் எழுந்து அருளிருக்கும்

மேலத்தெரு - அருள்மிகு முத்துமா காளியம்மன்
கீழத்தெரு - அருள்மிகு  - செல்லம்மா காளியம்மன் 

திருநடன திருவிழா நடைபெறும் 

அதுபோல் இந்த வருடம் 2014 யில் ஆகஸ்டு 4 ம் தேதி திங்கள்கிழமை இரவு அருள்மிகு துா்க்கையம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது




 


05-ஆகஸ்டு 2014 அன்று காலை 10 மணிக்கு 

மேலத்தெரு - அருள்மிகு முத்துமா காளியம்மன்
கீழத்தெரு - அருள்மிகு  - செல்லம்மா காளியம்மன் வீதியுலா காடசி நடைபெற்றது..


புதன்கிழமை, வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வெள்ளைசாற்றி யாகஸ்தானம் நடைபெற்றது.


இவ்நாட்களில் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் மற்றும் வழக்காடு மன்றம் நடைபெறும்.

இங்ஙனம் 

ஊர்மக்கள், விழாகுழுவினர்.


என்றும் இறைபணியில் உங்கள்

ரமேஷ் குமார் ராமலிங்கம்