விஷ்ணு சகஸ்ரநாமம்
தினமும் ஒரு திருநாமம்
இன்று 139ஆம் திருநாமம்.
சதுராத்மனே நமஹ:
(Chathuraathmane namaha)
திருமலையப்பனைப் பார்த்துக் கருடன், “எம்பெருமானே! இங்கே ஏழு மலைகளுள் ஆதிசேஷன் பெயரில் சேஷாத்ரி என்றொரு மலையும், எனது பெயரில் கருடாத்ரி என்றொரு மலையும் உள்ளன. ஆனால் ‘கருடாத்ரிநாதன்’ என்று உன்னை யாரும் அழைப்பதில்லை ‘சேஷாத்ரிநாதன்’ என்று தான் எல்லோரும் உன்னை அழைக்கிறார்கள்.
உனது பிரம்மோற்சவத்தில் கூட ஒருமுறை தான் கருட வாகனத்தில் நீ எழுந்தருளுகிறாய். சேஷ வாகனத்தில் மட்டும் இரண்டு முறை நீ எழுந்தருளுகிறாய். ஆதிசேஷனுக்கு நிகரான ஸ்தானத்தை எனக்கும் நீ வழங்கவேண்டும்!” என்று வேண்டினார்.
“உன் கோரிக்கை நிச்சயம் பரிசீலிக்கப்படும்!” என்றார் மலையப்பன்.
“இன்னொரு கோரிக்கையும் உள்ளது!” என்றார் கருடன்.
“அதென்ன?” என்று கேட்டார் மலையப்பன்.
“ஆதிசேஷனாவது பரவாயில்லை! ஆதிகாலத்திலிருந்து உனக்கு சேஷனாக (தொண்டனாக) இருந்து பணிவிடை செய்கிறார். சிறிய திருவடியான அனுமான் ராமாயணத்தில் தானே உன்னோடு வந்து சேர்ந்து கொண்டார். அவருக்கென்று எத்தனை தனி சந்நதிகள், அர்ச்சனைகள், மாலைகள், பூஜைகள்? ஆனால் பெரிய திருவடியான எனக்கெனத் தனியாக ஒரு சந்நதி கூட இல்லையே!” என்றார்.
“இதையும் பரிசீலிக்கிறேன்!” என்றார் திருமால். சிலகாலம் கழிந்தது. வைகுண்டத்தில் திடீரென மகாலட்சுமியைக் காணவில்லை.
கருடனை அழைத்த திருமால், மகாலட்சுமி எங்கு சென்றிருக்கிறாள் என்று தேடச் சென்னார் பல இடங்களில் தேடிய கருடன், திருநறையூர் எனப்படும் நாச்சியார்கோயிலில் மேதாவி என்னும் முனிவரின் மகளாக வஞ்ஜுளவல்லி என்ற பெயருடன் மகாலட்சுமி அவதரித்திருப்பதைக் கண்டறிந்து திருமாலிடம் தெரிவித்தார்.
அவளை மணந்து கொள்ள விரும்பிய திருமால், வாசுதேவன், பிரத்யும்னன், அனிருத்தன், சங்கர்ஷணன், புருஷோத்தமன் என ஐந்து வடிவங்களை எடுத்துக் கொண்டு நாச்சியார் கோயிலில் உள்ள மேதாவி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தார்.
மேதாவியிடம், “நாங்கள் ஐவரும் வேதம் கற்கும் பிரம்மச்சாரிகள். எங்களுக்கு இங்கே உணவு கிடைக்குமா?” என்று கேட்டார்.
மேதாவியும் தன் மகள் வஞ்ஜுளவல்லியிடம் வந்தவர்களுக்கு உணவு பரிமாறச் சொன்னார். ஐவரும் உண்டபின் கை கழுவுவதற்காக வஞ்ஜுளவல்லி ஒரு குவளையில் தண்ணீர் கொண்டு வந்தாள்.
முதலில் வந்த வாசுதேவன், கையை அலம்பியவுடன், வஞ்ஜுளவல்லியின் கையைப் பிடித்து இழுத்தார்.
“அப்பா!” என்று அலறினாள் வஞ்ஜுளவல்லி. மேதாவி ரிஷி கோபத்துடன் ஓடி வந்தார். அப்போது வாசுதேவன் தனக்கே உரிய அடையாளங்களாக இருக்கும் சுதர்சனச் சக்கரத்தையும், பாஞ்சஜன்யச் சங்கையும் எடுத்து மேதாவியிடம் காட்டவே, வந்திருப்பவர் திருமால் என உணர்ந்து அவருக்குத் தன் மகளை மணமுடித்து வைத்தார்.
இன்றும் நாச்சியார்கோவிலில் சங்கு சக்கரங்களை எடுத்து அடையாளமாகக் காட்டியபடி பெருமாள் எழுந்தருளியுள்ளார்
அதன்பின் கருடனை அழைத்த திருமால், “திருமலையில் நீ என்னென்ன கோரிக்கைகள் வைத்தாயோ அவை அனைத்தையும் இங்கே நிறைவேற்றி வைக்கிறேன். அனுமனுக்குத் தனியாகச் சந்நதி இருப்பது போல், இவ்வூரில் உனக்கெனத் தனிச் சந்நதி தருகிறேன்.."
"திருமலையில் கருடாத்ரி என்ற மலை இருந்தும், யாரும் என்னைக் கருடாத்ரிநாதன் என்றழைப்பதில்லை என்று வருந்தினாய் அல்லவா? அந்தக் குறை தீர, இவ்வூரில் நீ மலை போன்ற கல்கருடனாகக் கல்லால் ஆன திருமேனியுடன் விளங்குவாய். என்னை விடப் புகழ் பெற்றவனாக இவ்வூரில் நீ விளங்குவாய்.."
திருமலையில் இரண்டு முறை சேஷவாகனம் இருப்பது போல, இவ்வூரில் மார்கழியில் ஒருமுறை, பங்குனியில் ஒருமுறை என வருடத்தில் இரண்டு முறை கருட வாகனத்தில் நான் காட்சி தருவேன்!”என்று கூறினார்.
இன்றும் நாச்சியார்கோயிலில் தனிச்சந்நதியோடு கற்ற கருடன், கற்கின்ற கருடன், கற்க போகின்ற கருடன் என முக்காலத்திலும் கல்வி பயின்று கல்வி வரம் தரும் ‘கல்-கருடனாக’ கருடன் காட்சி தருகிறார். அவருக்கு அருள்புரியவந்த திருமால் வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், புருஷோத்தமன், சங்கர்ஷணன் என ஐந்து வடிவங்களுடன் காட்சி தருகிறார்.
இது போல் தன் அடியார்களுக்கு அருள் புரிவதற்காகப் பற்பல வடிவங்கள் எடுக்கிறார் திருமால்.
அந்த வகையில் வைகுண்டத்துக்கு வந்து திருமாலைத் தரிசிக்க முடியாத தேவர்களுக்குக் காட்சியளித்து அருள்புரிவதற்காகத் திருப்பாற்கடலில் வாசுதேவன், பிரத்யும்னன், அநிருத்தன், சங்கர்ஷணன் என நான்கு வடிவங்களோடு எழுந்தருளியுள்ளார்.
பாற்கடலில் இத்தகைய நான்கு வடிவங்கள் கொண்டு காட்சி தருவதால் ‘சதுராத்மா’ என்று திருமால் அழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 139-வது திருநாமம். “சதுராத்மனே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு அவர்களின் மனோபாவத்துக்கு ஏற்றபடி திருமால் அருள் புரிவார்.
(நன்றி டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்)