ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி

மணக்கால் அய்யம்பேட்டை | 2:48 PM | Best Blogger Tips
ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது எப்படி?

இந்த உலகில் இருக்கும் அனைவருமே ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்க்கையை கழிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், சமயத்தில் அதை எப்படி செயல்படுத்துவது என்று தெரியாமல் குழம்புகிறோம். இத்தகைய குழப்பங்களால் உடல் மற்றும் மனதில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. சொல்லப்போனால், வாழ்க்கையே சிலருக்கு வெறுமையாகிவிடும். இத்தகைய வெறுமை ஏற்பட்டால், எப்படி உலகில் வாழ வேண்டுமென்ற ஆசை ஏற்படும். எனவே மனதை லேசாகவும், சந்தோஷமாகவும் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சிலர் வாழ்க்கையை சந்தோஷமாக அமைத்துக் கொள்ள பல முயற்சிகளை மேற்கொள்கிறேன் என்ற பெயரில் தவறான வழியில் சென்றுவிடுகின்றனர். அவ்வாறு சென்ற பின்னர் அதிலிருந்து மீள்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆகவே எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னர், நாம் செய்வது நல்லது தானா என்பதை உறுதிபடுத்திக் கொண்டு, பின்னர் செயல்பட்டால் வாழ்க்கையே சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

இப்போது அந்த வாழ்க்கையை சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்ள எப்படி இருக்க வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வாழ்வை சந்தோஷமாக வாழுங்கள்.

போதுமான உறக்கம் :

இது உங்களை ஆரோக்கியமாக மட்டுமல்ல மகிச்சியாகவும் வைத்திருக்கும். ஒவ்வொரு இரவும் 8-10 மணிநேரம் உறங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். படுக்கைக்கு போவதற்கு ஒரு மணிநேரம் முன்னதாகவே மனதை லேசாக்கிக் கொள்வது நல்லது. அதிலும் பாட்டு கேட்பது மனதை லேசாக்கும். இதனால் படுத்தவுடன் நல்ல நிம்மதியான தூக்கம் வரும்.

சத்தான உணவு :

எல்லா நொறுக்குத் தீனிகளையும் குறைத்து விட்டு, தினமும் உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களின் அளவைக் அதிகரிக்கவும். இதனால் உடலில் புத்துணர்ச்சியும், மனதில் உற்சாகமும் அதிகமாகும்.

அதிகமான நீர் :

தண்ணீரை அதிகம் குடிக்கும் போது, சருமம் பளபளப்பாக இருப்பதால் தோற்றம் பற்றி நம்பிக்கை பெருகுகிறது. மேலும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் தண்ணீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. எனவே சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, ஒரு நாளில் 8 டம்ளர் தண்ணீரைக் குடிப்பது அவசியமாகிறது.

உடற்பயிற்சி :

வேகமான நடை, மிதமான ஓட்டம், அறையில் நடனம் இப்படி ஏதாவது ஒன்றை உடற்பயிற்சிக்காக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் உடலை உறுதியாகவும், மனதை லேசாவும் உணர வைக்கும் ஒரு மாயமே உடற்பயிற்சியாகும்.

நண்பர்கள்:

உண்மையான நண்பர்களை அருகில் கொண்டிருப்பதுடன், அவர்களை பாராட்டி உற்சாகப்படுத்தும் வழக்கத்தை கடைபிடியுங்கள். மேலும்நாம் எந்த மாதிரியான அன்பையும், மரியாதையையும் மற்றவர்களிடம் எதிர்பார்க்கிறீர்களோ, அவை அனைத்தையும் அவர்களுக்கு வாரி வழங்குங்கள்.

உதவி :

அம்மாவுக்கோ அல்லது மனைவிக்கோ வீட்டு வேலைகளில் உதவுங்கள். வீட்டை ஒழுங்குபடுத்துங்கள். இவையெல்லாம் அவர்கள் உங்களை மேலும் நேசிக்கத் தூண்டும். இதனால் ஒருவித மனநிறைவு கிட்டும்.

பொழுதுபோக்கு :

ஏதாவது ஒன்றில் ஆர்வத்தை செலுத்துங்கள். அது இசையோ, ஓவியமோ அல்லது விளையாட்டாகவோ இருக்கலாம். இதில் கவனத்தை செலுத்தினால், சாதனை புரிய முடியும். மேலும் நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வளரும்.


புன்னகையும் சிரிப்பும் :

எதற்கும் சோகபாவம் கொள்ளாமல், நகைச்சுவைக்கு முகம் கோணாமல் இருக்க முயலுங்கள். புன்னகையும் சிரிப்பும் எப்போதுமே மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும். சில நேரங்களில் உங்கள் புன்னகை, யாரோ ஒருவரின் சோக தினத்தையே வேறுவிதமாக மாற்றக்கூடும்.

மன அழுத்தத்தை குறைப்பது :

ஒருவரின் ஆரோக்கியத்தை கெடுப்பது மனஅழுத்தம். ஆகவே யோகா போன்ற மனப்பயிற்சிகளில் ஈடுபட்டு, மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். மேலும் எழுதுவது, புத்தகம் படிப்பது, இசை கேட்பது, இயற்கையை ரசிப்பது போன்ற செயல்களாலும் மனதை லேசாக்கலாம்.

வெளியே செல்வது :

நண்பர்களோடு வெளியில் செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, உறவினர்களை சந்திப்பது அல்லது சந்தோஷத்திற்காக பைக்கில் வெளியே செல்வது அல்லது செல்லப்பிராணியுடன் வெளியில் செல்வது போன்ற ஏதாவது ஒரு செயலை சாதாரண நேரங்களில் செய்தால், மனதில் கஷ்டம் இல்லாமல், மனமும் லேசாகும். ஏனெனில் இதுப் போன்ற சுற்றுச்சூழல் தான் எப்போதுமே மனதை லேசாக்கும் சக்தி கொண்டது.

நாம் நாமாக இருப்பது:

இந்த உலகில் பலர் தம்மிடம் இல்லாத ஒன்றை இருப்பதாக காண்பிப்பது, சுமையே. நம்மிடம் இல்லாததற்காக நாம் மற்றவர்களால் நேசிக்கப்படுவதைவிட, இருப்பதற்காக வெறுக்கப்படுவது எவ்வளவோ மேல். இதனால் எப்போதும் நாம் நாமாகவே பிரகாசிக்க முடியும்.