எந்த பெயரை உச்சரிக்கும் போது உங்கள் உடல் சிலிர்க்குமோ, தலை நிமிருமோ, நெஞ்சத்தில் வீரம் துளிர்க்குமோ, அந்த பெயர் "சிவாஜி".
இந்தியாவை 700 ஆண்டுகளாய் கொடுரமாய் ஆட்சி செய்து வந்தனர் அரேபிய, துருக்கிய மற்றும் ஆப்கானிய வெறியர்கள். ஹிந்துக்கள் மற்றும் புத்த, ஜைன மதத்தினரின் ஆயிரக்கணக்கான வருட பாரம்பரிய கலாச்சாரத்தை குலைத்து அவர்களின் இலக்கியங்களையும், புத்தகங்களையும் அழித்து, அவர்களின் நாகரீகத்தையே நாசப்படுத்திய அந்த கொள்ளையர்கள் அகண்ட பாரதத்தின் வடக்கிலும், மேற்கிலும், கிழக்கிலும் முழுவதுமாய் பரவி தென்னகத்தின் கடைசி எல்லையை நோக்கி விரிந்துக் கொண்டிருந்தனர். அவர்களை எதிர்ப்பதற்கு யாருக்கும் துணிவில்லை, தட்டி கேட்க யாராலும் முடியவில்லை. சிவாஜி என்ற சிங்கம் பிறக்கும் வரை.
தீயது மிக வேகமாய் பரவும் ஆனால் சீக்கிரம் அழிந்துவிடும் என்று சொல்வார்கள். கொடுங்கோலன் ஔரங்கசீப் அவ்வாறுதான் வேகமாய் பரவினான். பாபர் என்ற கொள்ளையனின் வழி வந்த ஔரங்கசீப்பை கொடுமைகளின் எல்லையாக சொல்லலாம். சிவாஜியின் சரித்திரத்தை பார்க்கும் முன் நாம் ஔரங்க்சீப் உடைய கொடுமைகளை பார்த்தாக வேண்டும்.
ஹாஜஹான் என்ற கேளிக்கை மற்றும் பெண்பித்தன் தன்னுடைய ஏழு மனைவிகளில் ஒருவளான மும்தாஜ் மஹாலுக்கு அவளின் இறப்பிற்கு பின் பிரமாண்டமான மாளிகைகள் கட்டியும், பல கேளிக்கை விடுதிகள், மண்டபங்கள் என மக்கள் வரிப் பணத்தால் சேர்க்கப்பட்ட கஜானாவை, காலி செய்து கொண்டிருந்தான். அவனுக்கும் மும்தாஜுக்கும் 14 குழந்தைகள் அதில் ஒருவன்தான், விஷப்பாம்பை விட கொடியவனான ஔரங்கசீப். எப்போதும் கேளிக்கையிலும் பெண் பித்தத்திலும் திரிந்துக் கொண்டிருந்த தகப்பன் ஷாஜகான் ஔரங்கசீப்பை கண்டுகொள்ளவில்லை. சிறு வயதிலேயே அவன் குரானையும், ஹடீத்தையும் கற்றான். அரேபிய மற்றும் பாரசீக கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டு மூளை சலவை செய்யப்பட்ட அவன், ஒருவன் மோசமான கல்வியால் எத்தனை பயங்கரமானவனாக மாறுவான் என்பதற்கு அருமையான உதாரணம்.
கொடூரமான எண்ணம் கொண்ட அவன் ஆட்சியை பிடிப்பதில் மிகவும் கவணமாக இருந்தான. தன்னுடைய மூத்த சகோதரனான "தாரா ஷிகோ" என்பவனை கட்டி இழுத்து வந்து கொன்றும், மற்ற சகோதர்களையும், தன் தந்தையையும் சிறையில் அடைத்தும் ஆட்சிக்கு வந்தான் ஔரங்கசீப். அவன் தன் ஆட்சியில் குடியையும், கேளிக்கையும் மட்டும் அல்ல, நல்ல இசையையும் தடை செய்தான். அவனுடைய ஆட்சியில் பயங்கரமான யுத்தங்கள் நடந்தன, வெறித்தனமான அவனின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பலரும் அவனுக்கு அஞ்சினர். அவன் ஆட்சி நாலா பக்கங்களிலும் விரிந்தது.
மதவெறியனான ஔரங்கசீப்பை, சிந்துவிலும், முல்தானிலும், பனாரஸ்ஸிலும் ஹிந்து பண்டிதர்களின் சொற்பொழிவுக்கு பல இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் செல்வது, கோபத்தை தூண்டியது. அவன் அவனுடைய சுபதார்களை அப்படிப்பட்ட மடங்கள், ஆசிரமங்கள் ஆகியவற்றை மொத்தமாக அழிக்க உத்தரவிட்டான். சுஃபி துறவியான "சர்மத் கஷானி" என்பவரை அரசியல் ஆதாயங்களுக்காகவும், ஒன்பதாவது சீக்கிய குருவான "தேஜ் பகதூர்" என்பவரை அவனின் "கட்டாய மதமாற்றத்தை எதிர்த்ததற்கும்" கொன்றான். வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி கிட்டத்தட்ட 60000 ஹிந்து மற்றும் புத்த கோவில்களை அவன் அழித்தான். அதில் பிரசித்திப் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில், கேசவ் தியோ கோவில் மற்றும் சோமநாதர் கோவில் ஆகியவை அடக்கம்.
இத்தகைய சூழ்நிலையில் தான் மஹாராஷ்ட்ரத்தின், இன்றைய பூனேவுக்கு அருகில், ஷிவ்நேரி என்ற மலைக்கொட்டையில் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு "சிவாஜி" என்று பெயரிட்டனர். விஜயநகரத்தை வீழ்த்திய பிறகு அந்த பிரதேசத்தை, பீஜாப்பூர், கோல்கொண்டா, அஹம்மத்நகர் என்ற மூன்று சுல்தான்கள் ஆண்டுக் கொண்டிருந்தனர்.
முகலாய சாம்ராஜ்யத்திற்கும், சுல்தான்களுக்கும் சமாதான உடன்படிக்கை நிலுவையில் இருந்தது.
அவரின் தந்தை ஷாஜி போஸ்லே, பெங்களூரில் இந்த சுல்தான்களின் ஆளுமைக்கு உட்பட்ட, ஆனால் தனி அதிகாரம் கொண்ட ஒரு படைக்கு தலைவராக இருந்தார். பூனேவில் இருந்த சிவாஜியோ அம்மா ஜீஜாபாயின் பாசப் பினைபில் வளர்ந்தார். தாயின் பக்தி நெறியுடன் வளர்க்கப்பட்டார். மஹாபாரதத்தையும், இராமாயனத்தையும் விரும்பி படித்தார். அவருடைய வாழ்க்கையில் அந்த புத்தகங்களின் தாக்கம் மிகப்பெரிய பங்கை ஆற்றியது. ஹிந்து மதம் மற்றும் இஸ்லாமிய சுஃபி துறவிகளுடைய தொடர்புகளும் அவருக்கு தொடர்ந்து ஏற்பட்டது. சிறு வயதிலேயே அந்த பகுதியில் இருந்த காடுகளில் அவர் தன்னந்தனியாக சுற்றுவார். காடுகள் மற்றும் மலைகளை ரசிப்பார், அவற்றின் ரகசியங்களை தெரிந்து கொள்வார். தன்னுடைய பண்ணிரண்டாம் வயதில் அவர் பெங்களூருக்கு கூட்டி செல்லப்பட்டு அங்கிருந்த தன் சகோதரர் சம்பாஜியுடன் இனைந்து போர் யுக்திகளை முறைப்படி கற்றுக் கொண்டார்.
சின்னஞ் சிறுவனாகிய சிவாஜி எப்படி மாபெரும் முகலாய சாம்ராஜ்யத்தை எதிர்த்து போரிட்டான் ? துணிவும், விவேகமும் உள்ளவனுக்கு எதுவும் சாத்தியம் என்று எப்படி நிருபித்தான் ? இரண்டாம் மற்றும் இறுதி பகுதியில் பார்ப்போம்.