ஸ்ரீமதி எம்.எஸ். சுப்புலக்ஷ்மியின் இசைப்பணி, இசையால் இறைபணி-உலகப்பணி ஆகியவற்றுக்கு உலக அரங்கில் வெற்றிவிழா நடத்திப் பார்க்க அம்பாள் உள்ளம் கொண்டாள் போலும்! பொருத்தமாக ஒரு விஜயதசமித் திருநாளில் அதை நடத்தி வைத்தாள். 1966 அக்டோபர் 23ஆம் தேதியாகிய விஜயதசமியன்று அவர் ஐக்கிய நாடுகள் சபையில் இசை விருந்து வழங்க ஏற்பாடாயிற்று.
அப்போது அவரது சார்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்குத் திருச்செவி சாத்தே ஸ்ரீ பெரியவாள் உலக மகா சபைக்கு ஆசி கீதம் இயற்றியளித்தார். இன்று பள்ளிச் சிறாரிலிருந்து எல்லோரிடமும் தேசிய கீதத்துக்கு அடுத்தபடியாகப் பிரசித்தி பெற்றுவிட்ட கீதம்!
மைத்ரீம் பஜத, அகில ஹ்ருஜ்-ஜேத்ரீம்!
ஆத்மவதேவ பராநபி பச்யத!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ: ஸகல தயாளு:!
தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா:!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
ஆத்மவதேவ பராநபி பச்யத!
யுத்தம் த்யஜத! ஸ்பர்தாம் த்யஜத!
த்யஜத பரேஷ்வக்ரமம்-ஆக்ரமணம்!
ஜநநீ ப்ருதிவீ காமதுகாஸ்தே,
ஜநகோ தேவ: ஸகல தயாளு:!
தாம்யத! தத்த! தயத்வம் ஜநதா:!
ச்ரேயோ பூயாத் ஸகல ஜநாநாம்!
இந்த கீதத்தின் தமிழாக்கம்:
அனைத்துளம் வெல்லும் அன்பு பயில்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!
போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!
அன்னியர் தமையும் தன்னிகர் காண்க!
போரினை விடுக! போட்டியை விடுக!
பிறனதைப் பறிக்கும் பிழை புரிந்தற்க!
அருள்வாள் புவித்தா, காமதேநுவா!
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!
அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக! – என்பதுதான்.
அப்பன் ஈசனோ அகிலதயாபரன்!
அடக்கம் – கொடை – அருள் பயிலுக, மக்காள்!
உலகினரெல்லாம் உயர்நலம் உறுக! – என்பதுதான்.
இப்பாடலில் வரும் தாம்யத – தத்த – தயத்வம் என்ற சொற்றொடர் ப்ருஹதாரண்யக உபநிஷத்தில் வருவதாகும். அது குறித்த கதை: ஒரு சமயம் தேவர்கள், மானுடர்கள், அசுரர்கள் ஆகிய மூன்று இனத்தாரும் ப்ரஜாபதி (ப்ரஹ்மா)யிடம் உபதேசம் வேண்டினர். அவர் தமது உபதேசத்தை த-த-த என்ற இடியின் ஒலியாகக் கூறி அருளினார். த என்பதை தேவர்கள், ‘தாம்யத’ எனப் பொருள் கொண்டனர். அப்பதத்துக்குப் ‘புலன்களைக் கட்டுப்படுத்துங்கள்’ என்று அர்த்தம். தேவர்கள் புலனின்பம் துப்பதிலேயே ஈடுபட்டவர்கள். ஆதலால் தங்களுக்கு இந்த உபதேசம் எனக் கொண்டனர்.
மானுடரோ த என்பதை ‘தத்த’ எனப் பொருள் கொண்டனர். ‘தத்த’ என்பதற்கு ஈகை உடையவர் ஆக இருங்கள் என அர்த்தம். மானுடர்களுக்கு ஈகை குணம் மிகவும் குறைவாக இருப்பதாலேயே இப்படி உபதேசம். அசுரர்கள் த என்பதை ‘தயத்வம்’ – அதாவது, தயையுடன் இருங்கள் – எனப்பொருள் கொண்டனர்.
ஆதிசங்கரர் இதற்கு உரை எழுதுகையில், மானுடரிலேயே தெய்விக குணமும், அசுர குணமும் உடையவர்கள் இருப்பதால் இம்மூன்று உபதேசங்களுமே மானுடர்களுக்கானவை எனத் தெளிவு செய்துள்ளார்.
–நன்றி கல்கி