இயற்கை சூழ்ந்த அழகிய ஊர் !
18 கோவில்களும் ! 18 குளங்களும் ! 18 தெருங்களும் இருக்கும் அழகிய கிராமம் ! பழமையான பெயர் திருப்பெருவேளூர் !
தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 92வது தலம். ! அழகா அமைத்துள்ள தெருங்கள் ! எங்கள் ஊா்.
பக்கங்கள்
▼
மன்னிப்பு – கேட்போம் கொடுப்போம் !
மன்னிப்பு – இந்த வார்த்தை, சொல்வதற்கு
வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் அதைக் கேட்பதும் கொடுப்பதும், அவ்வளவு சுலபமில்லை.
பெரிய பெரிய பிரச்சனைகளையும் சச்சரவுகளையும் கூட ஒரே நொடியில் முடிவுக்குக்
கொண்டுவரும்திறமை இந்த
வார்த்தைக்கு உண்டு.
ஒருவர் இன்னொருவரை பாதிக்கின்ற விதத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டால், அத்தவறை உணர்ந்து, மனதார மன்னிப்புக்
கேட்கும் செயல் உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்று. அதற்கும் அப்பாற்பட்டது, கேட்கப்படும்
மன்னிப்பை ஏற்றுக்கொண்டு சகஜ நிலைக்குத் திரும்புவது.
“மன்னிப்பு கேட்பவன் மனுஷன், மன்னிக்கத் தெரிந்தவன்
பெரிய மனுஷன்“ என்று
ஒரு வசனம் உண்டு. இன்றைய சூழலில் அப்படிப்பட்ட மனிதர்களோ பெரிய மனிதர்களோ
காணக்கிடைப்பது அரிது. ஈகோ, பிடிவாதம், வாக்குவாதம், புரிதலின்மை போன்ற பல விஷயங்களால் மன்னிப்பு என்பதே மறைந்து
வருகிறது.
பலருக்கு, தான் செய்தது தவறென்று தெரிந்தும், அதை ஒப்புக்கொள்வதற்கு தன்மானம் இடம்பொடுப்பதில்லை. என்னதான் உயிர்
நண்பனாக, உறவினராக, காதலன்/காதலியாக, கணவன்/மனைவியாக
இருந்தாலும், வாக்குவாதங்களில்
இருக்கும் ஆர்வம், தவறுகளை ஒத்துக்கொள்வதிலோ, ஏற்றுக்கொள்வதிலோ இருப்பதல்லை.
உதாரணமாக, வகுப்பில் ஒரு மாணவன் எதையாவது திருடிவிட்டு, அதை ஒத்துக்கொண்டு
மன்னிப்பு கேட்கும்போது, இனி இப்படி செய்யக்கூடாதென்று அறிவுறுத்தி, அதை மன்னித்து
விட்டுவிட வேண்டும்.
அதைவிடுத்து, அன்றிலிருந்து எந்தப் பொருள் காணவில்லையென்றாலும், அதை அவன்தான்
எடுத்திருப்பானோ என்று சந்தேகக் கண்ணோடு பார்க்கக்கூடாது. இந்த நோக்கு, தவறு செய்யத் தூண்டுமே
தவிர ஒருபோதும் திருத்தாது.
நம்மில் பலர் இந்தத் தவறினை செய்கிறோம். கேட்கப்படும் மன்னிப்பை
தற்காலிகமாக வழங்கிவிட்டு, உள்ளூர அவர் செய்த தவறினை நினைத்துக்கொண்டே இருக்கிறோம். பல
சந்தர்ப்பங்களில் அதை சொல்லிக்காட்டி குத்திக்கொண்டே இருப்பது இதுபோன்றவர்களின்
வழக்கம்.
இது வெளியாட்களுக்கிடையே நடக்கும்போது ஏற்படும் பாதிப்பை விட, நேசிப்பவர்களுக்கிடையே
நடக்கும் சந்தர்ப்பங்களில், அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இன்னும் வெளிப்படையாக சொல்வோமேயானால், கணவன் மனைவிக்கிடையே அல்லது காதலர்களுக்கிடையே ஏதாவது மறைக்கப்பட்ட
உண்மைகள் தெரிய வரும்போதோ அல்லது தெரியப்படுத்தப்படும்போதோ, அதை ஏற்றுக்கொண்டு
மறக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
“மன்னித்துவிட்டேன்“ என்று வாயளவில் சொல்லிவிட்டு, அடுத்து ஏதாவதொரு சிறு
வாக்குவாதங்களில் கூட அதை சொல்லிக்காட்டுவது கீழ்த்தரமானது.
பல குடும்பத்தில் இந்தப் பிரச்சனையை நாம் பார்த்திருக்கலாம். கணவன்
அல்லது மனைவியின் பழைய காதல் பற்றிய உண்மைகள் தெரிந்தபோது, பெருந்தன்மையாக
ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்வார்கள்.
ஆனால் குடும்பத்தில் சிறு வாக்குவாதம் என்றாலும் “நீ இப்படி செஞ்சவ
தானே.. இதையும் பண்ணிருப்ப.. யாருக்கு தெரியும்“ என்று அசால்ட்டாக பேசுவார்கள். இந்த குணமே, நாளாக நாளாக உறவுகளின்
விரிசலுக்கு காரணமாகிவிடுகிறது.
ஒருவர், தான் சொன்ன பொய்யை ஒப்புக்கொள்ளும்போது, அடுத்து அவர் எதைப்
பேசினாலும் அது பொய்யாகவே இருக்கக்கூடுமோ என்று நினைக்கும் சந்தேக புத்தி தவறானது.
பொய் சொல்லித் தப்பிக்கும் பலரை விட, உண்மையை ஒப்புக்கொண்டு அவதிப்படுபவர்களே அதிகம். இங்கு நான் வைக்கும் வாதம், உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டாம் என்பதல்ல.
ஒப்புக்கொண்டதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதே. ஒரு முறை மன்னித்த
தவறை,அடுத்து மறந்துவிட வேண்டும் என்பதே.. ஒவ்வொருமுறையும் நினைவுபடுத்தி, தன்னையும் வருத்தி, சம்மந்தப்பட்டவரையும்
வருத்த வேண்டாம் என்பது தான்.