பக்கங்கள்

இத்தாலியில் பிறக்காதது ஆனந்த் செய்த பாவமா?

viswanathan-anand-the-world-chess-championபாரதத்தின் சதுரங்க (Chess) உலகின் முடிசூடா மன்னன் விஸ்வநாதன் ஆனந்திற்கு அண்மையில் ஏற்பட்ட அவமதிப்பு, தேசபக்தியுள்ள ஒவ்வொரு இந்தியர் மனதிலும் ஆறாத வடுவை உருவாக்கி இருக்கிறது. அவரது குடியுரிமை தொடர்பான சர்ச்சையும், மத்திய அரசு அந்த விவகாரத்தில் நடந்துகொண்ட விதமும், மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியச் சதுரங்க விளையாட்டுலகில் புது ரத்தம் பாய்ச்சியவர் ஆனந்த். சதுரங்கம் பாரதத்தின் தொன்மையான விளையாட்டாக இருந்தபோதும், ஆனந்த் வெற்றிவீரராக வலம் வரத் துவங்கிய பிறகே, இந்தியாவில் சதுரங்க விளையாட்டில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. நாட்டின் சதுரங்க விளையாட்டில் பெரும் புரட்சி ஏற்படுத்திய தனியொரு சாதனையாளராக ஆனந்த் கருதப்படுகிறார்.
viswanathan_anand_as_young_boyநடுத்தரக் குடும்பத்தில், ரயில்வே அதிகாரியின் மகனாகப் பிறந்த விஸ்வநாதன் ஆனந்த், உலகின் செஸ் மன்னராக வீற்றிருக்க, அவரது அயராத முயற்சிகளே அடிப்படை என்றால் மிகையாகாது. தமிழகத்தின் மயிலாடுதுறையில் 1969, டிச.11-ஆம் தேதி பிறந்தார் ஆனந்த். ஆறு வயதில் அம்மா சுசீலா மூலமாக சதுரங்க விளையாட்டின் அறிமுகம் ஆனந்திற்குக் கிடைத்தது. பள்ளிகளிலும், உள்ளூர் அளவிலும் அனாயசமாகச் சதுரங்கம் ஆடிய ஆனந்தின் திறமை மெல்ல பரவத் துவங்கியது.
தனது 14-ஆவது வயதில் (1983), தேசிய செஸ் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றார். 1984-இல் தேசிய கிராண்ட் மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றார். அதிவேகமான நகர்த்தல்களால் எதிராளியைத் திணறச் செய்வது ஆனந்தின் பாணி. இதன் காரணமாக, ‘மின்னல் பையன்’ என்ற பட்டப்பெயரையும் பெற்றார். பெற்றோரின் வழிகாட்டுதல்களால், அவரது வெற்றிப் பயணம் தொடர்ந்தது. 1987-இல் உலக ஜூனியர் செஸ் சாம்பியன் ஆனார். இந்நிலையை அடைந்த முதல் இந்தியர் ஆனந்த் தான். இதுவே இந்தியச் சதுரங்க அரங்கில் பெரும் மறுமலர்ச்சிக்கு வித்திட்டது. அடுத்த ஆண்டே நாட்டின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.
ஆனந்தின் சாதனையைப் பாராட்டி, அர்ஜுனா விருது (1985), பத்மஸ்ரீ விருது (1987), ராஜீவ்காந்தி கேள்ரத்னா விருது (1991) ஆகிய கௌரவங்கள் நாடி வந்தன. உலக அளவில் ஆனந்தின் பயணம் துவங்கியது. ஆனால், சர்வதேச கிராண்ட் மாஸ்டர்கள் கார்போவ், காஸ்பரோவ், விளாடிமிர் கிராம்னிக் உள்ளிட்டோரை வெல்ல ஆனந்த் போராட வேண்டி இருந்தது. அடுத்த பத்தாண்டுகள் ஆனந்திற்குப் போராட்டக் காலம்; ஆனந்த் அனுபவத்தை விரிவுபடுத்தி வந்தார்.
anand-palying-simultaneous-chess2000-இல் பிடே உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் முதன்முறையாக வென்றார். 2003-இல் பிடே அதிவேகச் சதுரங்கப் போட்டியிலும் வென்றார். 2007-இல் மீண்டும் உலக சாம்பியன் பட்டம் வென்றார். தொடர்ந்து 2008, 2010-ஆம் ஆண்டுகளிலும் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார். இன்றைய சதுரங்க உலகின் மிக வேகமான வீரராகவும், தொடர் சாதனையாளராகவும் ஆனந்த் விளங்கி வருகிறார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க வசதியாக, ஸ்பெயின் நாட்டின் கொலாடோ மேடியானோ நகரில், மனைவி அருணாவுடன் ஆனந்த் வசித்து வருகிறார். எனினும் சர்வதேசப் போட்டிகளில் இந்திய வீரராகவே பங்கேற்று வருகிறார்.
பிடே மதிப்பீட்டின்படி தற்போது ஆனந்த் 2,789 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்தில் உள்ளார். உலகச் சதுரங்க வரலாற்றில் பிடே தரப்பட்டியலில் 2,800 புள்ளிகளைத் தாண்டிய ஐவருள் ஆனந்தும் ஒருவர் (ஏப். 2006, ஏப். 2008). ஆனந்தின் வெற்றிகளுக்கு மகுடம் சூட்டும் விதமாக, பத்மபூஷன் (2000), பத்மவிபூஷன் (2007), செஸ் ஆஸ்கார்- (1997, 1998, 2003, 2004, 2007, 2008) பட்டங்களும் விருதுகளும் நாடி வந்தன.
இவர் 1994-லிருந்து முன்னணி வகிக்கும் செஸ் மூவரில் ஒருவராக விளங்குகிறார். இவ்வாறு சதுரங்க விளையாட்டின் மூலமாக நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துவரும் ஆனந்திற்கு, இதுவரை சந்தித்திராத அவமானத்தை அண்மையில் மத்திய அரசு ஏற்படுத்திவிட்டது.

குடியுரிமை விவகாரம்
ஐதராபாத் பல்கலைக்கழகம் அண்மையில் (ஆக.24) சர்வதேச கணிதவியலாளர் மாநாட்டை நடத்தியது. இம்மாநாட்டில் கௌரவ டாக்டர் பட்டத்தை ஆனந்திற்கு வழங்க ஓராண்டுக்கு முன்னரே முடிவெடுத்து, அதற்கு அனுமதி கோரி, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு பல்கலைக்கழகம் அனுப்பியது. இது ஒரு வழக்கமான நடைமுறை. ஆனால், அந்தக் கோப்பு நகரவே இல்லை. மாநாடு நடக்கும் நாள் நெருங்கியும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஆனந்திற்கு பட்டமளிக்க ஒப்புதல் அளிக்கவில்லை. இதன் காரணமாக, ஆனந்திற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழாவை ஐதராபாத் பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது.
அப்போதுதான், ஆனந்தின் குடியுரிமையை விவகாரமாக்கி, பட்டம் வழங்க ஒப்புதல் அளிக்காமல் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் இழுத்தடித்தது தெரிய வந்தது. ஆனந்த் தற்போது ஸ்பெயின் நாட்டில் தங்கி இருப்பதால், அவர் இந்தியக் குடிமகனா என்று அமைச்சகம் உறுதிப்படுத்த விரும்பியுள்ளது. அதற்கான ஆதாரமாக, தனது இந்திய பாஸ்போர்ட் நகலை ஆனந்த் சமர்ப்பித்தும் இருக்கிறார். அதை அமைச்கரகத்திலுள்ள எந்த மேதாவியோ ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்தான், கௌரவ டாக்டர் பட்டம் வழங்க முடியாமல் போய்விட்டது என்பது வெளிப்பட்டது

நடந்த நிகழ்வுகள் ஆனந்திற்கு வருத்தம் அளித்தன. ”ஸ்பெயினில் வசித்தாலும் நான் இந்தியக் குடிமகனே. எனது இந்திய பாஸ்போர்ட் போதாதா எனது குடியுரிமைக்கு?” என்று கேட்டார் ஆனந்த். நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல், ஆனந்தை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
கோப்புகளைக் கையாளும் முறையில் ஏற்பட்ட நடைமுறைச் சிக்கல்களால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுவிட்டதாக சப்பைக்கட்டு கட்டிய அவர், ஆனந்த் விரும்பும் இன்னொரு நாளில், கௌரவ டாக்டர் பட்டத்தை ஐதராபாத் பல்கலைக்கழகம் வழங்கும் என்று தெரிவித்தார். ஆனால் அதை ஆனந்த் ஏற்கவில்லை.
கௌரவ டாக்டர் பட்டத்தை ஏற்கப் போவதில்லை என்று ஆனந்த் அறிவித்து விட்டார். இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. பா.ஜ.க.வின் ஷாநவாஸ் உசேன் தலைமையில், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும், ஆனந்திடம் இந்திய அரசு நடந்துகொண்ட முறையைக் கண்டித்து குரல் எழுப்பினர்.
vishy-with-young-chess-players-in-a-matunga-school-mumbaiஇதுபற்றிக் கருத்துத் தெரிவித்த ஆனந்தின் மனைவி அருணா, ”கௌரவ டாக்டர் பட்டம் பெறாதது ஏமாற்றம் அளிக்கவில்லை; உண்மையில் எரிச்சலையே ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருமுறை சர்வதேசப் போட்டிகளில் விளையாடும்போதும் ஆனந்தின் அருகில் இந்திய தேசியக் கொடியைக் காணலாம். இதைவிட வேறு என்ன அத்தாட்சி தேவை? வேறு எப்படி ஆனந்தின் இந்தியக் குடியுரிமையை நிரூபிப்பது?” என்று கேட்டார். இதற்கு மத்திய அரசிடம் எந்தப் பதிலும் இல்லை.
நடந்துவிட்ட விரும்பத் தகாத சம்பவத்தால் ஆனந்த் சற்றும் மனம் கலங்கவில்லை. ஐதராபாத் பல்கலையில் மறுநாள் நடந்த கணிதவியலாளர் மாநாட்டில் 39 சதுரங்கப் புலிகளுடன் ஒரே நேரத்தில் விளையாடி, தனது நாகரிகத்தை அவர் நிரூபித்தார். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 39 சதுரங்க வீரர்களுடன் அவர் ஆடிய மின்னல்வேகச் சதுரங்கத்திலும் அவரே வென்றார்.

விவகாரக் குடியுரிமை
நடந்தது நடந்துவிட்டது என்று இதை விட்டுவிட முடியவில்லை. ஏனெனில், இந்திய அரசியலில் குடியுரிமை விவகாரத்திற்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. இதில் முதல் ஆளாய் வருபவர் நமது சோனியா அம்மையார் தான்.
** sonia_con01_cartoonஇத்தாலியில் பிறந்த அந்தோனியோ மைனோ, இந்தியாவின் ராஜ குடும்பத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தியை காதல் திருமணம் செய்தது 1968-ஆம் ஆண்டு. சோனியா என்ற நாமகரணத்துடன் இந்தியா வந்தது அதற்கு அடுத்த ஆண்டு. ஐந்து ஆண்டுகள் கழித்து கணவரின் மூலமாக இந்தியக் குடியுரிமை பெற அவருக்கு வாய்ப்பிருந்தது. ஆனால், 1983 வரை அவர் இந்தியக் குடியுரிமை பெறவில்லை. இந்தியாவின் பிரதான அரசியல் குடும்பத்தில் மருமகளாக இருந்தபோதும் அவர் இந்தியக் குடியுரிமையை பெறவே இல்லை. ஆனால் பல தேர்தல்களில் (16 ஆண்டுகள்) வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டார்.
1984-இல் ராஜீவ் பிரதமராக வாய்ப்பு பிரகாசம் அடைந்ததைத் தொடர்ந்தே அவர் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பித்து, முறைப்படி பெற்றார். ஆக, இந்தியாவில் இருந்துகொண்டே இத்தாலி நாட்டின் குடிமக்களாகத் தொடர்ந்தவர் தான் சோனியா அம்மையார். (1992 வரை, இத்தாலியைச் சேர்ந்தவர் வேறு நாட்டில் குடியுரிமை பெற்றிருக்க கூடாது என்ற கட்டுப்பாடு இருந்தது குறிப்பிடத் தக்கது. தற்போது இத்தாலி குடிமகன்கள் வேறு நாட்டில் இரட்டைக் குடியுரிமை வைத்துக் கொள்ளலாம் என்று சட்டத்தைத் திருத்திவிட்டனர்). அதே சோனியா தான் தற்போதைய மத்திய அரசின் மூலவிசையாகச் செயல்படுகிறார்.

m-f-hussain1** இந்துத் தெய்வங்களை ஆபாசமாக வரைந்ததற்காக சிவசேனையின் மிரட்டலுக்கு ஆளானவர் ஓவியர் எம்.எப்.ஹுசைன். இவர் 2006-லிருந்தே இந்தியாவை விட்டு வெளியேறி- இந்தியக் குடியுரிமை வேண்டாம் என்று கூறி- கத்தார் நாட்டில் வசிக்கிறார்.
அந்நாடு அவருக்கு இந்த ஆண்டு கத்தார் குடியுரிமை வழங்கிவிட்டது. அவர் அங்கு இருக்க வேண்டாம்; மீண்டும் இந்தியா திரும்ப வேண்டும் என்று அரசுத் தரப்பிலும், மதச்சார்பின்மையைக் குத்தகைக்கு எடுத்துள்ளவர்களும் தொடர்ந்து அவரிடம் வலியுறுத்தி வருகிறார்கள்.

attack-on-taslima-nasrin** வங்கதேசத்தில் பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த காரணத்தால் மதவெறியர்களால் வேட்டையாடப்பட்டு, தப்பிப் பிழைத்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் 1994-லிருந்து அந்நாட்டை விட்டு வெளியேறி ஜெர்மனி, ஸ்வீடன் நாடுகளில் பத்து ஆண்டுகள் தஞ்சம் புகுந்தார். மொழி அடிப்படையில் வங்காளி என்பதால் இந்தியாவில் வசிக்க அவர் விரும்பினார்.
கடுமையான கட்டுப்பாடுகளுடன் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட சிறை வாழ்க்கை போல 2004 முதல் 2007 வரை இந்தியாவின் கொல்கத்தா நகரில் வாழ்ந்த அவர் மீண்டும் ஸ்வீடன் சென்றுவிட்டார். அவருக்கு இந்தியாவில் வசிக்க நிரந்தரக் குடியுரிமை வழங்க இந்திய அரசு மறுத்துவிட்டது.
இவ்வாறாக, இந்தியாவே வேண்டாம் என்று சென்ற எம்.எப்.ஹுசைனை (கத்தார்) வலிய அழைத்துக் கொண்டுள்ளது நமது அரசு. இந்தியாவில் வசிக்க விரும்பியும் தஸ்லிமாவுக்கு (வங்கதேசம்) அதே அரசு அனுமதி அளிக்காமல் தவிர்க்கிறது. இந்தியாவில் 16 ஆண்டுகள் வசித்தபோதும் இந்தியக் குடியுரிமை பெறாத சோனியா (இத்தாலி) மத்திய அரசின் சூத்திரதாரியாக, அதே அரசாலும், காங்கிரஸ் கட்சியாலும் போற்றப்படுகிறார்.
அதே அரசுதான், இந்தியாவுக்கு மாபெரும் பெருமைகளைச் சதுரங்க விளையாட்டின் மூலம் பெற்றுத் தந்த தமிழகத்தின் தவப் புதல்வன் விஸ்வநாதன் ஆனந்தை ஸ்பெயின் நாட்டில் வசிப்பதற்காகச் சோதித்திருக்கிறது.
vishy-and-modiஒருவேளை விஸ்வநாதன் ஆனந்த் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்தவராக இருந்திருந்தால் இந்நிலை அவருக்கு ஏற்பட்டிருக்காது. அல்லது அவரும் சோனியா பிறந்த அதே இத்தாலியில் பிறந்திருக்க வேண்டும். இந்த இரண்டில் ஒன்றைக்கூட செய்யாதது தான் ஆனந்த் செய்த மகத்தான தவறு என்று கருத வேண்டி இருக்கிறது. ஆனந்திற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுவது, தாமதம் வாயிலாக தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக நமது மனசாட்சி தட்டி எழுப்பப்பட்டுள்ளது.

நன்றி tamilhindu.com