சிவராத்திரி மகிமைகள்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 9:55 | Best Blogger Tips

சிவபெருமானுக்குரிய விரதங்களிலேயே தலை சிறந்தது சிவ ராத்திரி விரதம்.
எட்டுணையும் உளத்து அன்பிலரேனும் உளரேனும் இந்நாள் எம்மை
கண்டவர் நோற்றவர் பூசை பண்ணினர் நற்கதி அடைவர்
என்று சிவபெருமான் சொன் னதாக சிவராத்திரி புராணத்தைக் கூறும் வரத பண்டிதம் தெரிவிக்கிறது. எள்ளளவும் அன்பு இல்லாதவர்கள் ஆனாலும் சரி... அன்பு உள்ளவர்கள் ஆனாலும் சரி. சிவராத்திரி அன்று சிவபெருமானை தரிசித்தவர், விரதம் இருந்தவர், பூஜை செய்தவர் ஆகியோருக்கு நற்கதி கிடைக்கும் என்பதே மேற்கண்ட பாடலின் பொருள்.
சிவராத்திரி என்றால், நமக்குத் தெரிந்தது ஒரு சிவராத்திரிதான். ஆனால், சிவராத்திரி ஐந்து வகையாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவை: மாக சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி.
மாக சிவராத்திரி: மாக சிவராத்திரியே ‘மகா சிவராத்திரி’ என அழைக்கப்படுகிறது. மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு ‘வருஷ சிவராத்திரி’ என்ற பெயரும் உண்டு.
யோக சிவராத்திரி: யோக சிவராத்திரியில் நான்கு வகை உண்டு. அதன் விவரம்:
1. திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும். அதாவது பகல்- இரவு சேர்ந்த அறுபது நாழிகை (24 மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி.
2. திங்களன்று சூரிய அஸ்தமனம் முதல் அன்று இரவு 4 ஜாமமும் (12 மணி நேரம்) தேய்பிறை சதுர்த்தசி இருந்தாலும் அதுவும் யோக சிவராத்திரி.
3. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணியில் இருந்து 6 மணி வரை உள்ள நேரத்தில்), அமாவாசை அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தாலும் அன்று யோக சிவராத்திரி.
4. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால் அன்றும் யோக சிவராத்திரி.
இந்த நான்கு ‘யோக’ சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரியன்று விரதம் இருந்தாலும் அதற்கு ‘மூன்று கோடி சிவராத்திரி’ விரதம் இருந்த பலன் கிடைக்கும்.
மார்கழி மாத வளர்பிறை சதுர்த் தசி, திருவாதிரை நட்சத்திரத்துடன் வந்தாலும், மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, செவ்வாய்க்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் வந்தாலும், அந்த சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்குச் சமம்.
நித்திய சிவராத்திரி: வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை-வளர்பிறைகளின் சதுர்த்தசி திதி இடம்பெறும் இருபத்துநான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி.
பட்ச சிவராத்திரி: தை மாதத் தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினாலாம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
மாத சிவராத்திரி: பெரும்பாலான சிவ ராத்திரிகள், அமா வாசை அல்லது சதுர்த்தசியை அனு சரித்து வரும். ஆனால் இந்த மாத சிவராத்திரி, மாதத் தின் மற்ற திதிகளிலும் வரும்.
மாசி மாதத் தேய்பிறை சதுர்த்தசி, பங்குனி மாத வளர் பிறை திருதியை, சித்திரை மாதத் தேய் பிறை அஷ்டமி, வைகாசி மாத வளர் பிறை அஷ்டமி, ஆனி மாத வளர் பிறை சதுர்த்தசி, ஆடி மாதத் தேய் பிறைப் பஞ்சமி, ஆவணி மாத வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி மாத வளர்பிறை திரயோதசி, ஐப்பசி மாத வளர்பிறை துவாதசி, கார்த்திகை மாத வளர்பிறை சப்தமி, தேய்பிறை அஷ்டமி, மார் கழி மாத வளர்பிறை சதுர்த்தசி- தேய்பிறை சதுர்த்தசி, தை மாத வளர்பிறை திருதியை ஆகிய இந்தப் பதினான்கு நாட்களும் மாத சிவராத்திரி எனப்படும்


இறைவன் நினைவே இனிய இரவு!
வாழ்க வளமுடன் !! நலமுடன்!! நன்றி!! நன்றி!!

-என்றும் அன்புடன் DHANNA LAKSHMI