நவீன இயற்பியலின் பிதாமகர் ஐன்ஸ்டீன்!

மணக்கால் அய்யம்பேட்டை | PM 3:36 | Best Blogger Tips

ஜெர்மனியில் யூத குடும்பத்தில் பிறந்தவர். மூன்று வயது வரை பேசாமல் இருந்த இவரை மந்தமான குழந்தை என்றே எண்ணினார்கள். அவருக்கு அவரின் அப்பா கொடுத்த காம்பஸ் பெரிய ஈர்ப்பை ஏற்படச் செய்தது.

பள்ளியில் சொந்தமாகவே நுண்கணிதத்தை கற்றுத்தேறினார். சிறு வயதிலேயிருந்து வார்த்தைகளாலும் சொற்களாலும் சிந்திப்பதைக்காட்டிலும் படங்களாகவும் காட்சிகளாகவும் சிந்திப்பார் ஐன்ஸ்டைன்.

ஐன்ஸ்டீனுக்கு 15 வயதானபோது இத்தாலியில் மிலான் நகருக்கு குடியேறினர். அங்கு அவரது தந்தை வர்த்தகத்தில் நொடித்துபோனதும் சுவிட்சர்லாந்துக்கு சென்றார் ஐன்ஸ்டீன். புகழ்பெற்ற சுவிஸ் பெட்ரல் பாலிடெக்னிக் நுழைவுத்தேர்வில் அவர் தோல்வி அடைந்தார். உலகிலேயே ஒன்றரை கிலோ அதிசயத்தை அதிகம் பயன்படுத்திய மனிதனுக்கே இடம் கிடைக்காத கல்லூரி இது என்கிற வாசகம் இன்றைக்கும் அலங்கரிக்கிறது.

அங்கே தான் மிலிவா என்கிற இவரை விட வயது மூத்த வயது பெண்ணை காதலித்தார். மாற்றுத்திறனாளி ஆன அவர் அந்த கல்லூரியில் டாப்பர். இவரை காதலிக்க ஆரம்பித்து அவர் தேர்வில் தோல்வியடைய இவர் எள்முனையில் தப்பித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டார்கள். அதற்கு முன்னமே இவர்களுக்கு பிறந்த குழந்தையை மிலிவா தத்துக்கொடுத்து விட்டதாக சொல்வார்கள். நிலவை பற்றி கவிதை எழுதி ஐன்ஸ்டீனிடம் கொண்டுபோய் கொடுத்தால், "நிலவில் காற்றுநீர் எதுவும் இல்லை. அது ஒரு பாறை கோளம். உனக்கென்ன அறிவே இல்லையா?" எனக்கேட்டார் நம்ம மேதாவி.

ஐன்ஸ்டீனுக்கு கிடைத்த முதல் வேலை விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை பதிவு செய்து ஆராய்வது. அப்பொழுது எழுதி வெளியிட்ட மூன்று கட்டுரைகள் தான் இயற்பியல் உலகின் புதிய ஏற்பாடு எனப் புகழப்படுகின்றன.

அவரின் சார்பியல் தத்துவம் தான் மிகவும் விவாதத்துக்கு உள்ளானது. இந்த சிந்தனை தான் எத்தனை அளப்பரிய மாற்றங்களை அறிவியல் உலகில் உண்டு செய்து இருக்கிறது என நினைக்கிற பொழுது சிலிர்க்கிறது. நியூட்டன் எனும் மாமேதையின் கருத்துக்களை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச பல பேர் பயந்தபொழுது, ஐன்ஸ்டீன் மட்டும் மிக அழுத்தந்திருத்தமாக தன் கோட்பாடுகளை உலகின் முன் வைத்தார்! சார்பியல் தத்துவம் உதித்தது!

இத்தனைக்கும் அவர் என்றைக்கும் இயற்பியல் ஆய்வகங்களில் மூழ்கிக்கிடந்தவர் இல்லை. பல இடங்களில் சார்பியலின் அடிப்படைகளை எளிமையாக விளக்கி வந்தார். ஒளி மாதிரி சில சங்கதிகள் தான் மாறாதவை. காலம் எல்லாம் மாறுதலுக்கு உட்பட்டது என்றார். எளிமையாக அதை ஐன்ஸ்டீன் இப்படி விளக்குவார்... "ஒரு ஸ்டவ் அடுப்பின் மீது உட்கார்ந்து பாருங்கள் ஒரு நிமிடம் ஒரு மணிநேரமாக தோன்றும்; அழகான ஒரு பெண்ணோடு உரையாடிக்கொண்டு இருங்கள்.. ஒரு மணிநேரம் ஒரு நிமிடம் போல தோன்றும்". ஸ்டீவன் ஹாகிங் இதை "நீங்கள் ஏரோப்ளேனில் கிழக்கு நோக்கிப் பயணம் செய்யும்போது ரிலேட்டிவிட்டிபடி ஒரு மைக்ரோ செகண்டு இளமையாகிறீர்கள்… ஏரோப்ளேன் சாப்பாட்டைச் சாப்பிடாத பட்சத்தில்!"

சார்பியல் சார்ந்து உருவான E=mc 2 எனும் சூத்திரம் அதில் ஒன்று. இந்த சூத்திரத்தில் ஆற்றல் ஆனது நிறையோடு தொடர்புடையது என்றும் நிறையில் ஏற்படும் இழப்பு ஆற்றலாக வெளிப்படும் எனவும் வரையறுத்து சொன்னார். இதன் மீது ஆரம்ப காலத்தில் ஏகத்துக்கும் விவாதங்கள் எழுந்தன. அதனாலேயே நோபல் பரிசு இந்த ஆய்வுதாளுக்கு தராமல் ஒளிமின் விளைவுக்கு தரப்பட்டது.

எனினும், இந்த On the Electrodynamics of Moving Bodies ஆய்வுத்தாள் அடிப்படையாக கொண்டு அணுகுண்டு உருவானது சோகமான வரலாறு. ஏ பாம் ப்ராஜக்டை ஹெய்சன்பர்கை கொண்டு ஜெர்மனியில் ஹிட்லர் தொடங்கி இருப்பதை பற்றி கவலையோடு அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அமெரிக்க அணுகுண்டு சார்ந்த ஆய்வில் இறங்கவேண்டும் என்ற அவரின் வார்த்தையை செயல்படுத்தி அணுகுண்டு தயாரித்தது அமெரிக்கா.

அமைதிக்கு அதை அமெரிக்கா பயன்படுத்தும் என அவர் நம்பிக்கொண்டு இருக்க அதையே ஜப்பானின் இதயத்தில் அமெரிக்கா செலுத்திய பொழுது துடிதுடித்துப்போனார் அவர். அந்த நாள் முழுக்க அறையை சாற்றிக்கொண்டு அழுதார். சாப்பிடவே இல்லை. இத்தனை உயிர்களின் மரணத்துக்கு வித்தாகி விட்டோமே என்கிற கவலை அவரைப்பிடுங்கி தின்றது வலிநிறந்த வரலாறு!

உலகை இறைவன் எப்படி படைத்தார் என கண்டறிந்து விட வேண்டும் என சொன்ன இவருக்கு சமயங்களில் பெயரே மறந்து விடும். வீட்டுக்கு வழிதெரியாமல் நின்ற கதைகள் உண்டு. டிஸ்லெக்சியா வேறு இருந்தது. பின் எப்படி இயற்பியல் உலகின் சாதனைகள் சாத்தியமானது என கேட்டபொழுது "எனக்கொன்று தனித்திறமை எதவுமில்லை. எல்லையில்லா ஆர்வம் மற்றும் அறிவுக்கான தேடல் என்னை செலுத்துகிறது. சிக்கல்களோடு நான் கொஞ்சம் கூடுதலாக போராடுகிறேன்" என்றார். இன்று - ஏப்.18 : ஐன்ஸ்டீன் நினைவு தினம்.

- பூ.கொ.சரவணன்