குழந்தைகள் பொய் சொல்லாமல் தடுக்க சில யோசனைகள்

மணக்கால் அய்யம்பேட்டை | PM 2:52 | Best Blogger Tips


1. குழந்தையிடம் நீங்கள் உண்மையே பேச வேண்டும். அதன் முன்னிலையில் யாரிடமும் பொய் சொல்லாதீர்கள்.

2. அதற்கு நீங்களே பொய் சொல்லக் கற்றுக் கொடுக்கக் கூடாது. வேண்டாத விருந்தாளிகள் யாராவது அப்பா இருக்காரா“னு கேக்கும்போது,இல்லைனு சொல்லு என்று உங்கள் குழந்தையை விட்டுச் சொல்லக் கூடாது. இது தவறு.

3. உங்கள் குழந்தையைக் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்காதீர்கள். (அதன் பயமே அதற்குப் பொய் சொல்லத் தூண்டுமாம்).

4. அதன் கற்பனை சக்தியை வளர்ப்பது நல்லதுதான். அதிலேயே அதிக கவனம் செலுத்தி உண்மைக்கும், கற்பனைக்கும் வேறுபாடு தெரியாமல் செய்துவிடாதீர்கள்.

5. இதைச் செய்யாதே, அதைத் தொடாதே என்று பல கட்டுப்பாடுகளைக் குழந்தை மீது சுமத்தாதீர்கள். கூடியவரை குறைத்துக் கொள்ளுங்கள். (அதிகத் தடைகள் ஏற்பட்டால் அவற்றைக் கடைபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டுப் பொய் சொல்ல நேரிடலாம்).

6. குழந்தையிடம் திருப்பித் திருப்பிச் சாமர்த்தியமான கேள்விகளை கேட்காதீர்கள். அவற்றால் கலக்கமடைந்து பொய் சொல்ல ஆரம்பிக்கும். பிறகு அது தெரிந்தே பொய் சொல்ல இது வழிகாட்டும்.

7. பொய் சொல்வதால் ஏற்படும் தீமைகள் பற்றி மிகைப்படுத்தி அதற்கு உபதேசம் செய்யாதீர்கள். சிறிய தவறுகள் நேரிட்டால் என்ன கெடுதல் வந்து விடுமோ என்று அது பயந்து பலவகையான மனக்குழப்பங்களுக்கு ஆளாக நேரிடும். மாறாக, உண்மையாக இருப்பதால் ஏற்படும் நன்மை பற்றி எடுத்துக் கூறுங்கள்.

8. உண்மை பேசும்போது நீங்கள் அதற்காக உற்சாக மூட்டுங்கள். உண்மை பேசுவதைப் பலவகையிலும் ஆதரியுங்கள். தவறு செய்தபின் உண்மையை உங்களிடம் ஒளிக்காமல் சொல்லும் போது, செய்த தவறுக்காகக் கடிந்து கொள்ளாதீர்கள். உண்மை சொன்னதற்காகப் பாராட்டுங்கள். பிறகு இனிமேல் இப்படிச் செய்யாதே என்ற வார்த்தையே அதைத் திருத்தப் போதுமானது. தண்டனையால் பெற முயன்ற பலனை இம்முறையால் நிச்சயமாகப் பெறலாம்.


Thanks :
கலை செல்வி.